சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன் அமமுகவில் இணைந்தார்..அதிமுகவை இனி ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என பேட்டி

சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜவர்மன் டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார்.

சென்னை, மார்ச்-11

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன். கடந்த 2016 தேர்தலில் சாத்தூர் தொகுதியில் வென்ற எதிர்கோட்டை சுப்ரமணியன், டிடிவி தினகரன் பக்கம் சென்றதால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் ஆதரவாளராக வலம் வந்த ராஜவர்மன் சாத்தூர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வானார். ஆனால், அதன்பிறகு அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் ராஜவர்மனுக்கும் இடையே தொடர்ந்து பனிப்போர் நிலவியது. அமைச்சர் மீது கடும் குற்றச்சாட்டுகளை கூறி வந்தார் ராஜவர்மன்.

இதனிடையே நேற்று வெளியான அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ராஜவர்மனுக்கு சீட் வழங்கப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் உள்ள ராஜவர்மன் இன்று டிடிவி தினகரனை சந்தித்து அமமுகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராஜவர்மன், கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களை, உழைப்பவர்களை வேட்பாளர்களாக நிறுத்தவில்லை என்பது வருத்தம் எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால்தான் தனக்கு போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை எனவும் தெரிவித்தார். மேலும், வெற்றி வாய்ப்புள்ள யாருக்கும் அதிமுகவில் சீட் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டினார்.

அதிமுகவை இனி ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. சிவகாசியில் நின்று போட்டியிட தைரியமில்லாத ராஜேந்திர பாலாஜி ஏன் ராஜபாளையம் தொகுதிக்கு தாவினார் என்று கேள்வி எழுப்பினார். தான் சாத்தூர் தொகுதி கேட்டு அமமுகவில் விருப்பமனு அளித்துள்ளேன், வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவேன் என்றார்.

இதேப்போன்று அதிமுகவில் அதிருப்தியாளர்கள் பிரபு, கலைசெல்வன், ரத்ன சபாபதி உள்ளிட்டோரும் தினகரனை சந்திக்க வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *