தேர்தலில் போட்டியிட 3 அமைச்சர்களுக்கு வாய்ப்பு மறுப்பு..! முன்னாள் அமைச்சர்கள் 16 பேருக்கு வாய்ப்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 3 அமைச்சர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

சென்னை, மார்ச்-10

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் அதிமுகவின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர். இதில், கடந்த முறை வெற்றி பெற்று அமைச்சர்களாக பதவி வகித்து வரும் பாஸ்கரன், நிலோபர் கபில் மற்றும் வளர்மதி ஆகிய 3 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

பாஸ்கரன்:

2016 தேர்தலில் சிவகங்கை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற இவர், தமிழக காதி மற்றும் கதர்கிராமத் தொழில்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

சீ.வளர்மதி:

2016 தேர்தலில் திருவரங்கம் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற இவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

நிலோபர் கபில்:

2016 தேர்தலில் வாணியம்பாடி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற இவர், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

மீதமுள்ள தற்போதைய அமைச்சர்களின் பெயர்கள் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால், முன்னாள் அமைச்சர்கள்

நத்தம் விஸ்வநாதன், கே.வி.ராமலிங்கம், கே.பி.முனுசாமி, எம்.எஸ்.எம்.ஆனந்தன், தாமோதரன், கு.ப.கிருஷ்ணன், மு.பரஞ்சோதி, இசக்கி சுப்பையா, பி.வி.ரமணா, மாதவரம் மூர்த்தி, சின்னய்யா, வைத்திலிங்கம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி,  வைகைச்செல்வன், பா.வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட 16 முன்னாள் அமைச்சர்களுக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அமைச்சர்களில் பெரும்பாலோனோருக்கு, கடந்த முறை 2016ம் ஆண்டு போட்டியிட்ட சட்டமன்ற தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ராஜபாளையம்  தொகுதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த முறை ராஜேந்திர பாலாஜி சிவகாசி தொகுதி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனைபோல், கடந்த முறை போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்களுக்கே, இந்த முறையும் அதே தொகுதியில்  வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *