பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை.. 50 பேரிடம் விசாரணை – தமிழக அரசு தகவல்

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி மீதான புகாரின் அடிப்படையில் 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை, மார்ச்-10

சென்னை உயர்நீதிமன்றத்தில், சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கே.ராஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு காரில் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளான சிறப்பு டிஜிபி ஏற்கெனவே இதேபோல வேறொரு பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர். தொடர்ந்து இதேபோன்ற குற்றச்சாட்டில் ஈடுபடுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையாக தண்டனை வழங்கவேண்டும். உயர் போலீஸ் அதிகாரி மீதான புகாரை மாநில போலீஸான சிபிசிஐடி விசாரித்தால், மென்மையான அணுகுமுறையை கையாள்வார்கள். மேலும், பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு வழக்கை வாபஸ் பெற, அழுத்தம் கொடுத்து, அவரை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்குவார்கள். எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் எனவும் உத்தரவிட்டுள்ளது.மேலும், மேலும் இது குறித்து விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு தொடர்பாக 50 பேரிடம் விசாரணை நடத்தி வீடியோ ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *