புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் பாஜக, அதிமுக கூட்டணி உறுதி..!

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் பாஜக, அதிமுக கூட்டணி உறுதியானது. முதற்கட்டமாக பாஜக – என்ஆர் காங்கிரஸ் இடையே தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு கையெழுத்திட்டனர். புதுவையில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என். ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16, பாஜக 14 தொகுதி என ஒதுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, மார்ச்-9

புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் இடம் பெறுமா என்பதில் இழுபறி நீடித்து வந்தது. நேற்று (மார்ச் 8) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியுடன் பேசினார். அதைத் தொடர்ந்து, நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு, கூட்டணியை ரங்கசாமி உறுதி செய்தார். நேற்று இரவு எந்தெந்தத் தொகுதி என்பது தொடர்பாக, பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் நட்சத்திர ஹோட்டலில் கலந்து ஆலோசித்தனர்.

அதைத் தொடர்ந்து, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, அதிமுக கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன் எம்எல்ஏ ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது நிர்மல்குமார் சுரானா கூறுகையில், “புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் பாஜக, அதிமுக கட்சிகள் வரும் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜக, அதிமுகவுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், தொகுதிகள் ஒதுக்கீடு விரைவில் செய்யப்படும். 3 கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்திக்கும். பாமக இதில் இடம்பெறவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் எம்எல்ஏக்கள் முதல்வரைத் தேர்வு செய்வார்கள்” என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடந்த அறை முழுக்கக் கூடியிருந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவாளர்கள் முதல்வர் வேட்பாளராக ரங்கசாமியை அறிவிக்கக் கோரி கோஷமிட்டனர். அவர்களை ரங்கசாமி அமைதியாக இருக்கக் கூறினார்.

அப்போது பேசிய ரங்கசாமி, “2020 சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களில் போட்டியிடும். பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க 14 இடங்களில் போட்டியிடும். எங்கள் கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும்” என்றார். முதல்வர் வேட்பாளராக ரங்கசாமியை முன்னிறுத்துவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த நிர்மல்குமார் சுரானா, “முதல்வர் வேட்பாளர் குறித்து தற்போது பேச்சில்லை. தேர்தலுக்குப் பிறகு கூட்டணிக் கட்சியின் எம்.எல்.ஏக்கள் ஒன்றுகூடி முடிவெடுப்பார்கள்” என்றார்.

இதைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 9) தனியார் ஹோட்டலில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியும், பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். தொகுதிகள் எத்தனை என்பது தொடர்பாக ஒதுக்கீடு செய்யப்படாததால், அதிமுக கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன் எம்எல்ஏ இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *