வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது.. ஐகோர்ட்டு மறுப்பு

சென்னை, மார்ச்-9

வன்னியர்களுக்கான 10.5% சதவீத இட ஒதுக்கீடு மசோதா அண்மையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த இடஒதுக்கீடுக்கு தடை விதிக்க கோரி திண்டுக்கல்லை சேர்ந்த விஜயகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர், வன்னிய கவுண்டர், வன்னிய குல ஷத்திரியர் என ஏழு பிரிவினருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டுள்ளது.சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு பணிகள் துவங்கி உள்ளதால் ஆறு மாதங்களுக்கு தற்காலிகமாக இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்காமல் எப்படி இந்த சட்டம் இயற்றப்பட்டது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், 68 சாதிகளைக் கொண்ட சீர் மரபினர் பிரிவினருக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி வரும் நிலையில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள 22 சாதிகளுக்கு வெறும் 2.5 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும்.

தேர்தல் நெருங்கும் நிலையில் நிலையில் அரசியல் லாபத்திற்காக இந்த சட்டம் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன்பு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.எனவே, இந்த சட்டத்தின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசியல் காரணங்களுக்காக சட்டம் இயற்றப்பட்டு உள்ளது என்றும் 10.5 % வன்னியர்களுக்கு கொடுத்தால் மற்ற சாதியினருக்கு பாதிப்பு ஏற்படும் என மனுதாரர் தரப்பில் வாதிக்கப்பட்டது.

அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, உரிய நடைமுறைகளை பின்பற்றியே சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தேர்தல் ஆதாயத்திற்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.

இதையடுத்து, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், போதுமான ஆதாரங்கள் இல்லாமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் விஜயகுமார் தொடர்ந்த மனுவுக்கு தமிழக அரசு 8 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *