மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமகவுக்கு 40, ஐஜேகேவுக்கு 40 தொகுதிகள்..!
மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சி மற்றும் சமத்துவ மக்கள் கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.
சென்னை, மார்ச்-9

தமிழக சட்டசபை தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ரவி பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி 154 இடங்களிலும், சமக மற்றும் ஐஜேகே ஆகியவை தலா 40 இடங்களில் போட்டியிட உள்ளன. இதற்கான ஒப்பந்தம் சென்னையில் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பொது செயலாளர் குமரவேல், சமக சார்பில் சரத்குமாரும், ஐஜேகே சார்பில் ரவி பச்சமுத்துவும் கையெழுத்திட்டனர்.

பின்னர் மூவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, மாற்றத்திற்கான அணி தமிழகத்தில் உருவாகியுள்ளது என்று கூறினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் தெரிவித்தார்.