தமிழகத்தில் திமுக கூட்டணி, புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும்.. டைம்ஸ் நவ் – சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பில் அதிரடி தகவல்

டெல்லி, மார்ச்-9

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இதில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. அசாமில் மார்ச் 27, ஏப்ரல் 1, 6 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் மார்ச் 27 தொடங்கி ஏப்ரல் 29ம் தேதி வரை 8 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறுகிறது.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இம்மாநிலங்களில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் ஏபிபி செய்தி நிறுவனம், சி-வோட்டர் ஆய்வு நிறுவனத்தோடு இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், திமுக கூட்டணி 158 முதல் 166 இடங்கள் வரை வெற்றிபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த தேர்தலை காட்டிலும், திமுக-வின் வாக்கு வங்கி 1.7 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில், 5 மாநில தேர்தல் குறித்து டைம்ஸ் நவ் ஆங்கில தொலைக்காட்சி மற்றும் சி-வோட்டர் ஆய்வு நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், திமுக ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. திமுக கூட்டணி 43.2 சதவீத வாக்குகளுடன் 158 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. கடந்த 2016 தேர்தலில் இக்கூட்டணி 39.4 சதவீத வாக்குகள் பெற்றிருந்தது.

நடைபெறவிருக்கும் தேர்தலில் கடந்த முறையை காட்டிலும் கூடுதலாக 3.8 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.அதே போல், ஆளும் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு 32.1 சதவீத வாக்குகளுடன் 65 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது கடந்த முறையை காட்டிலும் 11.6 சதவீதம் குறைவாகும். கடந்த முறை, இக்கூட்டணி 43.7 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 7.1 வாக்கு சதவீதத்துடன் 5 தொகுதிகளிலும், அமமுக 6.5 சதவீதத்துடன் 3 தொகுதிகளிலும், இதரக் கட்சிகள் 11.5 வாக்கு சதவீதத்துடன் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. புதுச்சேரியை பொருத்தவரை, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் பாஜக, என்ஆர் காங்கிரஸ், அதிமுக கூட்டணி 18 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 12 இடங்களையும் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராக அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கேரளாவை பொறுத்த வரையில் ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி மீண்டும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 140 தொகுதியில் இக்கூட்டணி 82 தொகுதிகளில் வெற்றி பெறும். காங்கிரஸ் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனநாயக முன்னணி 56 இடங்களில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. பாஜவைப் பொறுத்த வரை இம்மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் பெறவில்லை. 2016ஐ போலவே இம்முறையும் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெல்லும் என கூறப்பட்டுள்ளது. அசாமில் மொத்தமுள்ள 124 தொகுதிகளில் பாஜ கூட்டணி 67 இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைக்கும் என கருத்துக்கணிப்பு முடிவில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும், காங்கிரஸ் 57 இடங்களை கைப்பற்றி கடும் போட்டி தரும் என கணிக்கப்பட்டுள்ளது.

பரபரப்பான மேற்கு வங்க மாநிலத்தில் மீண்டும் மம்தா பானர்ஜியே முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறப்பட்டுள்ளது. அவரது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 154 இடங்களிலும், பாஜ 107 இடங்களிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 211 தொகுதிகளில் வென்று அமோக வெற்றி பெற்றது. அதே போல, பாஜ வெறும் 3 தொகுதியில் மட்டுமே வென்றது. ஆனால் இம்முறை மேற்கு வங்கத்தில் பாஜ அசுர வளர்ச்சி அடைந்து 107 தொகுதிகளை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் 76 இடங்களை பெற்ற கம்யூனிஸ்ட்-காங்கிரஸ் கூட்டணி இம்முறை வெறும் 33 ல் மட்டுமே வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *