உண்மையான தர்மயுத்தம் இப்போதுதான் தொடங்குகிறது.. டிடிவி தினகரன் பேட்டி

உண்மையான தர்மயுத்தம் இப்போதுதான் தொடங்குகிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார். மக்களின் பேராரதரவுடன் நிச்சயமாக தமிழகத்தில் அம்மாவின் ஆட்சியை அமைப்போம். அதர்மத்தையும், தீயசக்தி கூட்டத்தையும் இந்த தேர்தலில் வீழ்த்தி அமமுக தமிழகத்தில் ஆட்சியமைக்கும் என்று தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சென்னை, மார்ச்-8

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அம்மாவின் ஆட்சியை தமிழ்நாட்டில் அமைப்பதற்காக அ.ம.மு.க. தொடர்ந்து போராடி கொண்டிருக்கிறது.

மற்ற கட்சிகள் பற்றி நான் பேச விரும்பவில்லை. நாங்கள் மாபெரும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் தேர்தலில் போட்டியிடுகிறோம். அ.ம.மு.க. வெற்றி பெற்று அம்மா ஆட்சியை கொண்டு வரும்.

வாக்கு சிதறாது என்ற நம்பிக்கையில் தமிழக மக்கள் எங்களுக்காக வாக்கு அளிப்பார்கள் என்ற எண்ணத்தில் தேர்தலில் போட்டியிடுகிறோம்.

தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களுக்காகத்தான் இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் ஆட்சி மன்ற குழுவில் இருக்கிறார்கள். அதில் யார் யார் தேர்தலில் நிற்பார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். சிறிது நாட்களில் உங்களுக்கு தெரியும்.

வதந்திகள், அவதூறுகள் எல்லாம் வரும். டெல்டா பகுதியில் அ.ம.மு.க. நிர்வாகிகளிடம் ஒரு நபர் பொய் தகவல்களை பரப்பி வருகிறார். 18 சீட் தருகிறோம். ஆனால் தினகரன் தான் வேண்டாம் என்று சொல்வதாக பொய் தகவல்களை பரப்புகிறார். ஆனால் அதை எங்கள் நிர்வாகிகள் நம்பமாட்டார்கள்.

இந்த சட்டப்பேரவை தேர்தலில்தான் உண்மையான தர்மயுத்தம் தொடங்குகிறது.

பாண்டவர்களாகிய நாங்கள் துரியோதனின் கூட்டத்தையும், தீயசக்தியையும் எதிர்த்து போராடுகிறோம். தர்மத்தின் பக்கம் நாங்கள் இருக்கிறோம். மக்கள் எங்களை ஆதரிப்பார்கள். நான் எந்தெந்த கட்சிகளிடம் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதையெல்லாம் சொல்ல முடியாது. இன்னும் இரண்டு நாட்களில் அ.ம.மு.க. கூட்டணி இறுதி வடிவம் பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *