சர்வதேச மகளிர் தினம்.. பெண்களை பாராட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து..!

உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை, மார்ச்-8

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சர்வதேச மகளிர் தினத்தன்று எங்கள் அழியாத சக்திகளுக்கு (பெண்கள்) வணக்கம். நம் தேசத்து பெண்களின் பல சாதனைகளால் இந்தியா பெருமை கொள்கிறது. பரந்த அளவிலான துறைகளில் பெண்கள் அதிகாரம் பெறும் வகையில் பணியாற்றுவதற்கான வாய்ப்பை பெற்றது நமது அரசாங்கத்துக்கு கிடைத்த கவுரவம்.

இவ்வாறு மோடி கூறி உள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி;-.

தங்களின் வாழ்வியலில் பல்வேறு சவால்களை மன உறுதியுடன் எதிர்கொள்ளும் அனைத்து மகளிருக்கும் அன்பான மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, பெண்கள் நலத்திட்டங்களை அம்மா வழியில் தொடர்ந்து செயல்படுத்தி, பெண்கள் பாதுகாப்பை என்றும் உறுதி செய்வேன் என உறுதியளிக்கிறேன்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி :-

தாய்மையின் இலக்கணமாக..
அறிவின் உறைவிடமாக..
வீரத்தின் அடையாளமாக..
உலகை இயக்கும் சக்தியாக..
சாதனை புரியவே பிறவிகொண்ட பெண்கள் அனைவருக்கும்
உள்ளம் கனிந்த மகளிர் தின வாழ்த்துகள்.

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் : –

தாயாக – மனைவியாக – சகோதரியாக – மகளாக சமூகத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வணக்கம்; #WomensDay வாழ்த்துகள்.திமுக ஆட்சியில் மகளிர் மேம்பாட்டிற்கு அளிக்கப்படவிருக்கும் முக்கியத்துவத்தின் தொடக்கமே ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை என்ற அறிவிப்பு!”

அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் :-

உலகை இயக்குகிற உன்னத சக்தியாக திகழும் பெண்மையைப் போற்றுகின்ற இந்நன்னாளில் மாதர் குலத்திற்கு இனிய மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம், அம்மாவின் வழியில் பெண்களுக்காக பாடுபடுவதில் உறுதியோடு இருக்கிறது.பெண்கள் நினைத்தால் இந்த சமூகத்தில் எத்தகைய மாற்றத்தையும் கொண்டுவர முடியும். அத்தகைய மாற்றத்தின் தொடக்கமாக நம்முடைய இல்லங்கள் அமையட்டும்.பெண்களை மதித்து கொண்டாடுவதுடன் அவர்களின் கரங்களை வலுப்படுத்துவதையும் நாம் அனைவரும் நம்முடைய வீடுகளிலிருந்து தொடங்குவோம். பெண் குலத்தை ஆண்டின் எல்லா நாட்களிலும் கொண்டாடி மகிழ்வோம்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: மகளிரின் உரிமைகளைப் பெறுவதோடு, பொருளாதார ரீதியாக சுயசார்புகளை அடைவதன் மூலமே அவர்களின் வாழ்வு ஏற்றம் பெற முடியும். இந்த லட்சியங்களை அடைவதே உலக மகளிர் தின வாழ்த்துச் செய்தியாக இருக்க முடியும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: பெண்களுக்கு நாம் வழங்க வேண்டிய அங்கீகாரங்கள் இன்னும் ஏராளமாக உள்ளன. பெண்களுக்கு கண்ணியமான, கவுரவமான வாழ்க்கையையும், பொதுவெளியில் அச்சமின்றி, சுதந்திரமாக நடமாடுவதற்கான உரிமையையும் வென்றெடுத்துத் தர வேண்டியது ஒட்டுமொத்த சமூகத்தின் உரிமை ஆகும். அதற்காக போராட இந்த நாளில் நாம் அனைவரும் உறுதிஏற்போம்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: பெண்கள் தாயாகவும், தாரமாகவும், சகோதரிகளாகவும் இருந்து, தொண்டுக்கும், தியாகத்துக்கும் இலக்கணமாக தங்கள் வாழ்வை அர்பணித்து கொள்கிறார்கள். அவர்கள் முன்னேற வேண்டுமென்றால் அதற்குரிய தகுதிகளை பெற சமூகம், அரசியல், பொருளாதாரம் இவை அனைத்திலும் அவர்கள் முழு பங்குபெற வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: குடும்பம், சமூகம், கல்வித் திட்டம், அரசு நடவடிக்கைகள், அமைப்புகள் என அனைத்திலும் பாலின சமத்துவத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை, போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து முன்னெடுக்கும்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: சமூக எழுச்சிக்கும், மலர்ச்சிக்கும் பெண்களின் பங்களிப்பு என்பது, மறைக்கவோ, மறுக்கவோ முடியாத ஒன்றாகும். மகளிர் விடுதலைக்காகவும், உரிமைகளுக்காகவும், அயராது தளராது நாளும் உழைப்போம் என சூளுரை மேற்கொள்வோம்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: மத்திய மாநில அரசுகள் பெண்களுக்கு கல்வியில், வேலை வாய்ப்பில், பாதுகாப்பில் இன்னும் அதிக கவனம் செலுத்தி அவர்களின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி: சமூக அடிப்படையிலும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்டவர்களையும், தாழ்த்தப்பட்டவர்களையும் முன்னேற்ற இடஒதுக்கீடு என்ற சமூக நீதி வழங்கப்படுவதைப் போல, பாலின அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மகளிரை முன்னேற்ற இட ஒதுக்கீடு என்ற பாலின நீதி வழங்கப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *