தெரிந்தோ தெரியாமாலோ தமிழகத்தில் பாஜக காலூன்ற அனுமதித்து விடக்கூடாது.. கே.பாலகிருஷ்ணன்

சென்னை, மார்ச்-8

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் பாஜக-அதிமுக ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்கிற கோட்பாடு நிறைவேறிவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அதேநேரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் அதிக பலத்தோடு சட்டப்பேரவையில் இடம்பெற வேண்டும் என்கிற எண்ணத்தோடு பேச்சுவார்த்தையைத் தொடங்கினோம்.

பாஜகவையும், அதிமுகவையும் முறியடிப்பது எந்த அளவுக்கு அவசியமோ, அதே அளவுக்கு அதிக எண்ணிக்கையில் நாங்கள் சட்டப்பேரவையில் இடம்பெற வேண்டும் என்பதும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல் அவசியம் என்கிற அடிப்படையில் தொடர்ந்து முயன்றோம். இறுதியாக இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 6 தொகுதிகள் என்பது உறுதியானது.

எங்களைப் பொறுத்தவரையில் கடந்த பல பொதுத் தேர்தல்களில் கூடுதலான இடங்களில் போட்டியிட்டதன் அடிப்படையில் 6 தொகுதிகள் என்பது சற்று குறைவான ஒன்று என்றாலும், கூடுதலாக இடம் திமுக ஒதுக்கும் என எதிர்பார்த்தோம். அதே சமயம் இன்றைக்கு அதிமுக-பாஜக கூட்டணியை முறியடிக்கும் அவசியம் இருக்கும் இந்தச் சூழ்நிலையில் எந்த ஒரு சிறு இடையூறும், பிரச்சினையும் இந்தக் கூட்டணியில் இடம் பெற்றுவிடக் கூடாது.

அதிமுக-பாஜக வெற்றிபெற சிறு வாய்ப்பும் அளித்துவிடக் கூடாது என்கிற போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக நின்று, திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளோடு இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது.

தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றுவிடக்கூடாது, திமுக கூட்டணி வெற்றிபெற்று மாற்று ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக 6 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவெடுத்து அந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளோம். நேற்று நடந்த மாநிலக் குழுக் கூட்டத்திலும் இதே முடிவை உணர்ந்து எடுத்தோம்.

தெரிந்தோ தெரியாமாலோ தமிழகத்தில் பாஜக காலூன்ற அனுமதித்து விடக்கூடாது என்பதில் உறுதியுடன் இருக்கிறோம்.

அதிமுக ஆட்சியை படுதோல்வியை அடையச் செய்ய வேண்டும்; சட்டப்பேரவையில் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்கிற கடமைகளை நிறைவேற்ற வேண்டிய சூழலில், 6 தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை ஏற்றுக்கொண்டு உடன்பாட்டில் கையெழுத்திட்டு இருக்கிறோம்.

புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.க்களை கொண்டு பாஜக அரசு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைத்தது. அப்படியொரு சூழலில் தமிழக சட்டப்பேரவையில் ஒன்றிரெண்டு பாஜக எம்.எல்.ஏ.க்கள் நுழைந்தால் கூட அது ஜனநாயகத்திற்கு ஆபத்தாக முடியும். எனவே, கூடுதல் தொகுதிகள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நம்முடைய அரசியல் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்கிற காரணத்திற்காக இந்த உடன்பாட்டுக்கு சம்மதித்துள்ளோம்.

234 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றிபெற நாங்கள் பாடுபடுவோம்.”.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *