ரூ.12 கோடியில் கீழடி அருங்காட்சியகம்: முதல்வர் அறிவிப்பு!!!

சென்னை, நவம்பர்-01

கீழடி தொல்பொருட்களை காட்சிப்படுத்த சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் 12 கோடி ரூபாய் மதிப்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழ் வளர்ச்சி, கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்பட்டது. காலை 10 மணி முதலே கருத்தரங்கம், கவியரங்கம், ஆகியவை நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து. மரபு சார்ந்த கலை நிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:

தமிழ்நாடு மாநிலம், ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் மதராஸ் மாகாணம் என அழைக்கப்பட்டது. தமிழ்நாடு என பெயரிடக் கோரி சங்கரலிங்கனார் உயிர் துறந்தார். பின்பு, 1967ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற அண்ணா, தமிழ்நாடு என பெயர் மாற்றினார்.

தமிழ்நாடு எல்லையை உறுதி செய்ய போராடிய ம.பொ.சிவஞானம், மார்ஷல் நேசமணி உள்ளிட்டோரை இந்த நன்னாளில் நினைவு கூர்வோம். தமிழ் மன்னர்கள் கடல் கடந்து வணிகம் செய்தனர், இமயத்தில் கொடி நாட்டினர். உலகில் முதல் மனிதன் தோன்றியது தமிழ் பேசும் மண்ணில் தான் என, ஞாயிறு தேவநேயப்பாவாணர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் வரலாறும், தமிழக மக்களின் வாழ்வும் தொன்மை வாய்ந்தது.  தமிழ் சமூகம் தான் இந்திய துணை கண்டத்திலேயே எழுத்தறிவு பெற்ற முதல் சமூகம் ஆகும், உலகிலேயே கப்பல் கட்டும் தொழிலில் தமிழர்கள் முன்னோடியாக திகழ்ந்தனர். தமிழர்களின் விருந்தோம்பலை சீன அதிபர் வெகுவாக பாராட்டியுள்ளார்.

கீழடி அருங்காட்சியகம்

கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள தொல்பொருட்களை காட்சிப்படுத்த சிவகங்கை மாவட்டம் திருப்புவணம் அருகே கொந்தகை பகுதியில் 12.21 கோடி ரூபாய் செலவில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *