வீறுநடை போடுவோம்! நாம் தமிழராய்! – சீமான் பெரு முழக்கம்

நாம் தமிழர் கட்சியின் 2021 சட்டமன்ற தேர்தல் பிரச்சார பெருமுழக்கம், ‘வா தமிழா வீறுநடை போடுவோம்’ – பிரச்சார பாடல் மற்றும் தேர்தல் பிரச்சார வடிவமைப்பு சமூக வலைதளங்கள் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த மாதம் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, வா தமிழா,வீறு நடைபோடுவோம் நாம் தமிழராய் என்ற பெரு முழக்கத்தை பிரச்சார பாடல் வழியாக நாம் தமிழர் கட்சி முன்னிறுத்துகிறது. அந்நியர் அபகரிப்பிலிருந்து தமிழ் மண்ணை மீட்க, தமிழர்களின் உரிமைகளை காக்க எழுந்து வா தமிழா, துணிந்து வா தமிழா என்று தமிழர்களின் பெருமைகளையும், கடமைகளையும் உரக்க முழங்கும் இந்த தேர்தல் பிரச்சார பாடல் அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

தமிழர்களின் நாடி நரம்புகளை முறுக்கேற்றும் வகையில் ஒலிக்கும் இப்பாடல் வெளியாகியுள்ள நிலையில் சென்னை ராயப்பேட்டையில் இன்று மாலை ஒரே மேடையில் நாம் தமிழர் கட்சியின் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற உள்ளது.

117 தொகுதிகளுக்கான ஆண் வேட்பாளர்களும், 117 தொகுதிகளுக்கான பெண் வேட்பாளர்களும் பங்கேற்கும் இக் கூட்டத்திற்கு தலைமை தாங்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வேட்பாளர்களை அறிமுகம் செய்து பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் ஆதித்தொல் குடிகள், தேர்தல் அரசியலில் ஒதுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்ட தமிழ்ச்சமூகங்கள் என அனைவருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியுள்ளதாவது,

“பேரன்பு கொண்டு நான் பெரிதும் நேசிக்கின்ற என் அருமை உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்.

நம் வாழ்வை மாற்றும் ஆற்றல் இரண்டு மட்டும், ஒன்று – சரியான வாய்ப்பு, இரண்டு – அந்த வாய்ப்பை நாம் பயன்படுத்தும் முறை.

நம் பேராற்றலையும் பெருங்கோபத்தையும் வெளிப்படுத்த, அடிமைத்தழைகளை அறுத்தெறிய மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு நம் கைகளில் வருகிறது.

வீரம் செறிந்த வரலாறுப் பெருமை கொண்டது நம் இனம், இன்று நம்மிடம் எஞ்சி நிற்பதும் அது மட்டுமே. வாக்கு அரசியலை நம்பி வீழ்ந்தோம், விதி மாறும் என்று நம்பி ஏமாந்தோம், காலம் கடந்ததே அன்றி நம் கோலம் மாறவில்லை.

இனி நமக்கான விதியை நாமே எழுதுவோம். அதிகாரம் தரும் அளப்பெரிய ஆற்றலை தன் லாபத்திற்காக பயன்படுத்தாமல், மக்களுக்கு என்ன தேவை என்று உணர்ந்து பணிபுரிய நம் மொழியையும், நாம் வந்த வழியையும் அறிந்தவரால் மட்டுமே முடியும்.

தமிழகமும் தமிழீழமும் நமது இரு தாயகங்கள். இன்று அந்தியரால் ஆக்கிரமிக்கப்பட்டு அழிவின் விளிம்பில் உள்ள இவை இரண்டையும் மீட்டு நம் மக்களின் உரிமையை நிலைநாட்ட உணர்வாய், உயிராய் தமிழையும், தமிழ் மக்களையும் நேசிக்கும் ஒரு அமைப்பால் மட்டுமே முடியும்.

அந்நியருடன் கைகோர்த்து அவர்களுக்கு அடிமை சாசனம் எழுதி சாமரம் வீசுவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்ல என்று போட்டி போட துடிக்கும் இந்த அடிமை கழகங்களால் ஒருபோதும் அது நிகழவே நிகழாது.

அரசியல் என்பதன் அவசியம் பாமரனுக்கும் புரிந்திட வேண்டும் என்றால் மக்கள் என்ற பேராற்றல் ஒன்றிணைந்து நல்லது எது என்று தீர்மானிக்க வேண்டும்.

தேர்தல் அரசியலில் சோரம் போகும் கட்சிகளுக்கு இடையில் எந்த விதமான அரசியல் சமரசமும் இன்றி தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் தொடர்ந்து தனித்தே களம் கண்டு, அரசியல் அதிகாரம் அடைய இயலாத தமிழ் குடிகளுக்கு வாய்ப்பளித்து, ஆணுக்குப் பெண் சமமல்ல, ஆணும் பெண்ணும் சமமென்ற பாலியல் வேறுபாடற்ற சமத்துவத்தை வழங்கி என் தேசியத்தலைவரின் நெஞ்சுறுதியையும் எளிய மக்களின் நேர்மையையும் மட்டுமே நம்பி நன்னெறி எனும் பாதையில் உங்கள் கண் முன்னே களத்தில் சளைக்காது நின்று போராடி வருகிறோம்.

இது நமக்கான நேரம், நமக்கான பயணம் என்பதை எனதருமை உறவுகள் நீங்கள் உணர வேண்டும். மாற்று அரசியலுக்காக வீறு நடை போடும் இந்த இளையோர் கூட்டத்திற்கு, நல்லரசியல் மலர்ந்திட வேண்டும் என விரும்பும் ஒவ்வொருவரும் துணை நிற்க வேண்டும்.

தமிழ் பாரம்பரியத்திற்கு எதிரான அந்நிய ஆக்கிரமிப்புகளை தடுத்து நிறுத்தி, நம் மண்ணை மீட்டெடுப்போம், வா தமிழா! நம் மக்களின் உரிமையை காப்போம், வா தமிழா!

போட்டுப் பாருங்க ஓட்ட,
அப்புறம் பாருங்க நாட்ட!

“வீறு நடை போடுவோம், நாம் தமிழராய்!”

நமது சின்னம் விவசாயி!
வெல்லப்போறான் விவசாயி! “

என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உணர்ச்சி பெருக்குடன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *