மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி என அறிவிப்பு..!

திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளது. இரு கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

சென்னை, மார்ச்-6

திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுவது குறித்த தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் மதிமுக 12 தொகுதிகளைக் கேட்டு வந்ததாகக் கூறப்பட்டது. மேலும் தனி சின்னத்தில்தான் மதிமுக போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறிவந்தார். இதனால், பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை நீடித்து வந்தது.

இந்த நிலையில் 6 தொகுதிகளில் அதுவும் உதயசூரியன் சின்னத்திலேயே மதிமுக போட்டியிடும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதையடுத்து மு.க.ஸ்டாலின், வைகோ ஆகியோர் முன்னிலையில் தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.

இதன் பின்னர், வைகோ செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

எந்தெந்தத் தொகுதிகள் என உத்தேசப் பட்டியல் அளித்துள்ளீர்களா?

இல்லை.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது ஏன்?

குறைந்தது 12 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் பொதுவான சின்னம் கிடைக்கும். இல்லையென்றால் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு சின்னத்தில் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்படும். இந்த நெருக்கடியான சூழ்நிலையைத் தவிர்க்கவே இந்த முடிவு எடுத்துள்ளோம். பிரச்சாரம் மேற்கொள்ள 12 நாட்களே உள்ளன. குறைந்த கால அளவில் தனிச்சின்னத்தை மக்களிடம் சேர்ப்பது நடைமுறை சாத்தியம் இல்லை.

மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்வீர்களா?

மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்வேன். சனாதன இந்துத்துவ சக்திகள் மூர்க்கத்தனமாகச் செயல்பட்டு, பெரியார், அண்ணாவின் திராவிட இயக்க பூமியில் இந்தி, சமஸ்கிருதத் திணிப்பில் ஈடுபட்டு சனாதனத்தைக் கொண்டு வர முயல்கின்றன.

திராவிட இயக்க பூமியில் பாஜகவின் ஏவல்களாக வருகின்ற சக்திகளை முறியடிக்க திமுகவுக்கு முழு ஆதரவு தருவோம். “உங்களுக்குப் பக்கபலமாக இருந்ததைப் போல ஸ்டாலினுக்கும் இருப்பேன்’ என கருணாநிதியின் கடைசிக் காலத்தில் நான் கூறினேன். அந்த உறுதிமொழியைக் காப்பாற்றுவேன். மதிமுகவின் ஆற்றலைத் திமுகவுக்காக நாங்கள் பயன்படுத்துவோம்.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் இணைவது எப்படி இருக்கிறது?

மகிழ்ச்சியாக இருக்கிறது.

உடன்பாடு எட்டப்பட்டதில் ஏன் காலதாமதம்?

காலதாமதம் இல்லை. இரு முறை நடந்தது. இது 3-வது முறை.

ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக எப்படிப் பார்க்கிறீர்கள்?

தமிழகத்திற்கு முதல்வராக வரக்கூடிய தகுதி கொண்ட தலைசிறந்த முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின்.

இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *