அரசின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் 21 தொழில் திட்டங்களுக்கு அனுமதி!!!

சென்னை, நவம்பர்-01

தமிழ்நாட்டில், 21 தொழில் திட்டங்களுக்கு, முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான உயர்மட்ட குழு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு, தொழில் முதலீடுகளை ஈர்க்க, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பயணம் மேற்கொண்டார். அப்போது, 41 நிறுவனங்களுடன் முதலீடுகளை ஈர்க்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

மேலும், முதலீடுகளை அதிகளவில் ஈர்த்திட, தொழில் வளர் தமிழ்நாடு திட்டம் மற்றும் முதலமைச்சர் தலைமையில் ஒரு உயர்மட்டக்குழு அமைப்பது போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த வகையில், தொழில் முதலீட்டு வழிகாட்டுதல் மற்றும் ஒற்றைச் சாளர அனுமதிக்கான முதல் உயர்மட்டக்குழு கூட்டம், தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், கே.சி.கருப்பணன், பென்ஜமின், தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், அரசு அனுமதிகளுக்காக ஒற்றைச் சாளர முறையில் விண்ணப்பித்து இருந்த 21 தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன்மூலம், 8 ஆயிரத்து 120 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் கிடைக்கப்பெற்று, 16 ஆயிரம் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் விரைவாக உருவாகும் வாய்ப்பு உறுதியாகியுள்ளது.

இந்த 21 தொழில் திட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர், சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, திண்டுக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்த, முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *