வன்னியர்களுக்கு உழைத்தவரை நாய் என்பதா?.. ராமதாசை வறுத்தெடுத்த வேல்முருகன்..!

சென்னை, மார்ச்-6

சென்னையில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் ராமதாஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், “வன்னியர் இட ஒதுக்கீட்டுக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராடியவர் வன்னியர் கூட்டமைப்பு தலைவர் சி.என் ராமமூர்த்தி. பல ஆண்டுகளாக வன்னியர் சமூகத்திற்காகத் தன்னலம் பார்க்காமல் உழைத்தவர் ராமமூர்த்தி. அப்படிப்பட்ட நபர் திமுகவுக்கு விலை போகிவிட்டார் என்ற குற்றச்சாட்டைச் சுமத்துகிறார். அவரை டாக்டர் ராமதாஸ் நாய் என்று வசைபாடுகிறார். கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்களையும் ஒருமையில் பேசியுள்ளார் ராமதாஸ். மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்படும் 20% இட ஒதுக்கீட்டில் வன்னியருக்கு 15% உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தவர் சி.என் ராமமூர்த்தி. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இதில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசை அறிவுறுத்தியது. ஆனால், எடப்பாடியும் ராமதாசும் தேர்தலுக்காகப் பொய் ஒப்பந்தம் போட்டு அதை 10.5 சதவீதமாகக் குறைத்துவிட்டார்” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் முன் வைத்தார்.

மேலும், வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக ஏராளமான வன்னியச் சங்கங்கள் போராடி வருகின்றன என்றும் இருப்பினும், வன்னியர் சமுதாய மக்களுக்காகத் தாம் மட்டுமே குரல் கொடுப்பது போன்ற மாய பிம்பத்தைக் கட்டமைக்க ராமதாஸ் முயல்கிறார் என்றும் அவர் விமர்சித்துள்ளார். தமிழக அரசுக் கல்வி, வேலை வாய்ப்பு 10.5% இட ஒதுக்கீடு பெற்றதற்கு ராமதாஸ்தான் காரணம் என்று உண்மைக்கு மாறாகச் செய்தி பரப்பப்பட்டு வருகிறது,

ராமதாஸ், அன்புமணிக்கு இட ஒதுக்கீட்டில் எந்த ஒரு பங்கும் கிடையாது. ராமதாஸ் மிரட்டும் வேலையை செய்து வருகிறார். மிரட்டித்தான் கட்சியில் அனைவரையும் இணைத்துள்ளார். என்னை மிரட்டும் பாணியில் ராமதாஸ் அவர்கள் பேசுகிறார். வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு கிடைக்க ராமதாஸ் தான் காரணம் என்று கூறுவது முற்றிலும் பொய்.

ராமதாஸின் இந்த பொய்யான அரசியல் வியூகத்தை நாங்கள் நிச்சயம் வென்றெடுப்போம். இட ஒதுக்கீடுக்கு வன்னியர் கூட்டமைப்பு தான் காரணம். நாங்கள் பெற்ற பிள்ளைக்கு அவர்கள் இனிஷியல் போட்டுக்கொள்வது எவ்விதத்திலும் சரியல்ல. பா.ம.க தானாகவே இந்த தேர்தலில் வீழும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *