கொளத்தூரில் ஸ்டாலின், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணியில் உதயநிதி..! அறிவாலயத்தில் நடந்த நேர்காணல்..!

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்த உதயநிதியிடம் திமுக தலைவர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.

சென்னை, மார்ச்-6

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம், கடந்த பிப்ரவரி 17-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. அதனையடுத்து பிப்ரவரி 28-ம் தேதி விருப்ப மனு தாக்கல் நிறைவடைந்தது. விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை மாவட்ட வாரியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றுடன் (மார்ச் 6.) நேர்காணல் முடிவடைகிறது. கடைசி நாளான இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்த ஸ்டாலினிடம், துரைமுருகன் நேர்காணல் நடத்தினார்.

2011, 2016 ஆகிய சட்டப்பேரவைத் தேர்தல்களில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், மூன்றாவது முறையாக இந்தத் தேர்தலிலும் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் போட்டியிட உள்ளார்.

அதேபோன்று, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி விருப்ப மனு அளித்தார். சேப்பாக்கம், திருவல்லிக்கேணி இரண்டு தொகுதிகளாக கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் களம் கண்டது. 2011 தேர்தலில் ஒரு தொகுதியாய் மாறிப் போனது. அத்தொகுதியில் 2011, 2016 தேர்தல்களில் திமுக சார்பில் மறைந்த ஜெ.அன்பழகன் வெற்றி பெற்றார். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஜெ.அன்பழகன் மறைந்த நிலையில், உதயநிதி அத்தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்தார்.

அவரிடம், நேரடியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். அப்போது பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி உள்ளிட்டோர் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *