எங்களுடன் வந்தால் நல்லது.. காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கும் ம.நீ.ம..!

சென்னை, மார்ச்-6

தி.மு.க. -காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. காங்கிரஸ் கேட்ட தொகுதிகளை விட மிக குறைவான தொகுதிகளை கொடுக்க திமுக முன்வந்ததால் காங்கிரஸ் நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். இதையடுத்து செயற்குழு கூட்டத்தை கூட்டி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது, அப்போது 30 தொகுதிகள் வரை தந்தால் திமுகவுடன் கூட்டணியை தொடரலாம் என்று சிலர் கூறி உள்ளனர். சிலர் தனித்து போட்டியிடலாம் என்றும், சிலர் கமல் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்றும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் நிர்வாகிகளின் இந்த கருத்து, தி.மு.க.வின் முடிவு ஆகிய விபரங்களுடன் வீரப்ப மொய்லி டெல்லி விரைந்துள்ளார். ராகுல் காந்தியை சந்தித்து, தமிழக நிலவரம் பற்றி எடுத்து சொல்வார். ராகுலின் ஆலோசனைப்படி அடுத்த கட்ட நகர்வு இருக்கும்.

திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில், காங்கிரசுக்கு கமல் ஹாசனின் மக்கள் நிதி மய்யம் அழைப்பு விடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு வந்தால், அவர்களுக்கு நல்லது என ம.நீ.ம. பொதுச்செயலாளர் குமரவேல் கூறி உள்ளார். மக்கள் நீதி மய்யப் பொதுச் செயலாளர் சி.கே.குமரவேல் கூறுகையில், “காங்கிரஸ் எங்களுடன் வர வேண்டும் என்பதில் விருப்பம் இருக்கிறது. ஏனென்றால், எங்கள் இரு கட்சிக்கும் ஒரே டிஎன்ஏ. தமிழகத்தில் மிகப்பெரிய மாறுதலை அவர்கள் வந்தால் உருவாக்கலாம். வரவில்லையென்றாலும் நாங்கள் மாறுதல் கொண்டு வருவோம். வந்தால் காங்கிரஸுக்கு நல்லது.

அப்படியில்லையென்றாலும் மக்கள் மாறுதலுக்காக எங்களுக்கு ஆதரவளிக்கத் தயாராகிவிட்டார்கள். பேச்சுவார்த்தை வெவ்வேறு மட்டங்களில் நடந்து கொண்டிருக்கிறது. நான் அதை வெளியிட முடியாது” என்று பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இதனிடையே மய்யத்தின் தலைவர் கமல், “காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பது பாஜகவின் திட்டம். அப்படி அவர்கள் திட்டமிட்டிருக்கும்போது, காங்கிரஸ் கட்சிக்கு எம்எல்ஏ, எம்.பி. பதவிகள் கிடைக்காத அளவுக்கு, அவர்களுடைய இருப்பை இல்லாமல் செய்துகொண்டிருக்கும் இவர்கள்தான் (திமுக) பாஜகவின் ‘பி’ டீம். இது இந்நேரம் காங்கிரஸுக்குப் புரிந்திருக்க வேண்டும். புரியவில்லையென்றால் அனுதாபம் மட்டும்தான் சொல்ல முடியும்” என்று பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *