கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டி

சென்னை, மார்ச்-6

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என டெல்லி மேலிடம் அறிவித்துள்ளது.

2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற பொன்.ராதாகிருஷ்ணன் 2019-ல் நடந்த மக்களவை தேர்தலில் தோல்வியை தழுவினார். பொன்.ராதாகிருஷ்ணன் 2019-ம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாருக்கு எதிராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே திமுக கூட்டணியில் மீண்டும் களமிறங்கும் எனத் தெரிகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக தவிர அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் பெரிய அளவில் வாக்குகளைப் பெறவில்லை.

இருமுனைப் போட்டி நிலவும் கன்னியாகுமரி தொகுதியைப் பொறுத்தவரையில் ஒரு அணியின் வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுவிட்டார். காங்கிரஸ்- திமுக கூட்டணியின் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் காங்கிரசில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *