அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு..கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தோ்தலிலும் போட்டி

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இடைத்தோ்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை, மார்ச்-6

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது.

அதிமுக கூட்டணியில் முன்னதாக பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத்தொடா்ந்து, தொகுதிப் பங்கீடு தொடா்பாக அதிமுக, பாஜக தலைவா்கள் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வந்தனா். இதில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து தற்போது பாஜகவுக்கு 20 சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இடைத்தோ்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட தொகுதிப் பங்கீடு குறித்த அறிக்கை: தமிழகத்தில் வரும் ஏப்.6-இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து சந்திப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட ஒப்பந்தப்படி அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 20 சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கத் தீா்மானிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஏப்.6-ஆம் தேதி நடைபெற உள்ள கன்னியாகுமரி மக்களவை இடைத் தோ்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு அதிமுக தனது முழு ஆதரவு அளிக்கும் என்றும் தீா்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை இரவு கையெழுத்தானது. தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி, பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி, மாநிலத் தலைவா் எல். முருகன் ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *