ஜார்க்கண்ட் சட்டசபைக்கு நவ. 30 முதல் 5 கட்டங்களாக தேர்தல்

புதுடெல்லி, நவம்பர்-01

ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு 5 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் ரகுபர் தாஸ் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி வருகிற ஜனவரி 5-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 81 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 30-ம் தேதி தொடங்கி 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. மேலும், நாட்டிலேயே முதன்முறையாக ஜார்க்கண்ட மாநில சட்டப்பேரவை தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு தபால் வாக்கு நடைமுறைப்படுத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து ஜார்க்கண்டில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிக்கையின்படி, ஜார்க்கண்டில் 80 வயதிற்கும் அதிகமான மூத்த குடிமக்கள் 2.19 லட்சம் பேரும், மாற்றுத்திறனாளிகள் 2.16 லட்சம் பேரும் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *