திமுக தரும் தொகுதிகளை ஏற்றுக்கொண்டால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போய்விடும்.. கண் கலங்கிய கே.எஸ்.அழகிரி

சென்னை, மார்ச்-5

காங்கிரஸ் கட்சியின் விரிவுபடுத்தப்பட்ட செயற்குழு கூட்டம் சத்தியமூர்த்திபவனில் நடந்தது. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த கூட்டத்தில், மேலிட பொறுப்பாளார் தினேஷ் குண்டுராவ், தேர்தல் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி, செயல் தலைவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளின் கருத்து கேட்கப்பட்டது. பின்னர் செயற்குழு கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி உணர்ச்சி வசப்பட்டு பேசி இருக்கிறார். கூட்டத்தில், கே.எஸ்.அழகிரி பேசியதாவது, ராகுல்காந்தி வருகையின் போதுஏற்பட்ட எழுச்சியால் ஆளுங்கட்சிகள், எதிரிகள், ஏன் காங்கிரஸ் தோழர்களே வியந்து போனார்கள்.

தேர்தல் நேரத்தில் நாம் ஆற்றவேண்டிய கடமை அதிகம். திமுகவுடன், உம்மன்சாண்டி தலைமையிலான குழு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தினோம். குறைந்த அளவு தொகுதிகள் தருவதாக சொன்னார்கள். மலைக்கு மடுவுக்கும் உள்ள வேறுபாடாக இருந்தது.

மதசார்பற்ற கொள்கை என்ற நோக்கத்துடன் தான் திமுக உடன் நாம் ஒர் நேர்கோட்டில் பயணித்து கொண்டு இருக்கிறோம். 110 தொகுதியை பெற்ற காங்கிரஸ் கட்சி, தற்போது குறைவான தொகுதிகளை பெற்றால், அடுத்த முறை கூட்டணி பேசுவதற்கு காங்கிரஸ் கட்சி இருக்காது. சுயமரியாதையை இழக்கா வண்ணம் தொகுதியை பெறுவோம்.

கணவன் – மனைவி உறவு கூட இத்தனை ஆண்டுகாலம் அடங்கி, ஒடுங்கி இருக்கமாட்டார்கள். அந்த அளவு அனுசரித்து செல்கிறோம். இருப்பினும் குறைந்த தொகுதிகளே ஒதுக்கப்படுகிறது. காங்கிரஸ் – திமுக உறவு நீடித்து வருகிறது. சரியான முறையில் பேசி இடங்களை பெறுவோம். தலைமை எடுக்கும் முடிவுக்கு தொண்டர்கள் ஒத்துழைக்க வேண்டும் என பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேவேளையில், செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, கூட்டணி குறித்து தொடர்ந்து திமுக தலைவர்களிடம் பேசுகிறோம். விரைவில் பேச்சு வார்த்தை முடியும் , ஒன்றாக இணைந்து போட்டியிடுவோம் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.

மேலும் இன்று பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை எனக் கூறிய அவர், விரைவில் தொகுதி பங்கீடு முடிவடையும் எனக் கூறினார். அப்போது திமுக கொடுக்கும் தொகுதிகளை ஏற்பீர்களா என்ற கேள்விக்கு , கூட்டணியும் நட்பும் சமமாக இருப்பது தான். கொடுப்பதை எல்லாம் எடுத்துக்கொள்வதோ, கொடுக்கவே மாட்டோம் என்பதோ கூட்டணிக்கு அர்த்தமாகாது என தெரிவித்தார். 3 ஆம் கட்ட பேச்சு வார்த்தை எப்போது என்ற கேள்விக்கு இது மூன்றாம் கட்டமல்ல பல முறை பேசிவிட்ட , விரைவில் பேச்சுபார்த்தை நடத்தப்பட்டு முடிவு செய்யப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *