அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சட்டப்பேரவைத் தேர்தலில் 6 தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசமியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை, மார்ச்-5

தமிழகத்திற்கு ஏப். 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுகவில் விருப்ப மனு அளித்தவர்களிடம் ஒரே நாளில் நேர்காணல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதிமுகவில் சுமார் 8,200 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். இதில், தங்களுக்காக விருப்ப மனு அளித்தவர்களை அதிமுக தலைமைக்கழகம் நேர்காணலுக்கு அழைத்திருந்தது. நேற்று காலை 9 மணி முதல் இந்த நேர்காணல் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், 9 பேர் கொண்ட குழுவின் முன்னிலையில், நேர்காணல் நடைபெற்றது.

இந்நிலையில், 6 தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று (மார்ச் 5) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று கூட்டாக வெளியிட்ட அறிவிப்பின்படி, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வமும், சேலம் புறநகர் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமியும், ராயபுரம் தொகுதியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும், விழுப்புரம் தொகுதியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும், தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ, திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நிலக்கோட்டை தனித்தொகுதியில் திண்டுக்கல் மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.தேன்மொழி எம்எல்ஏ ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட ஆறு தொகுதிகளிலும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களே மீண்டும் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *