“ஒரு கை பார்ப்போம்..” திமுகவுக்கு ஷாக் கொடுத்த காங்கிரஸ்.!

41 தொகுதி கேட்போம். இல்லையெனால் 234 தொகுதிகளிலும் தனித்து நிற்போம். தன்மானம் காப்போம்’’ என போஸ்டர் அடித்து திமுகவுக்கு ஷாக் கொடுத்து வருகின்றனர்.

சென்னை, மார்ச்-5

காங்கிரஸ் கடந்த 2016 பொதுத்தேர்தலின் போது 41 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் 8 இடங்களில் தான் வெற்றி பெற்றது. இதனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையிலான குழுவினர் அண்ணா அறிவாலயத்திற்கு பேச்சுவார்த்தை நடத்த சென்ற போது 18 தொகுதிகளில் இருந்து பேச்சுவார்த்தையை தொடங்குவதாக தி.மு.க. அறிவித்தது. இது காங்கிரசாருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

திமுக- காங்கிரஸ் கட்சிகள் இடையே தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல் எழுந்துள்ள நிலையில், இன்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் என நம்பப்படுகிறது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு, குறைந்த அளவிலான இடங்களையே திமுக ஒதுக்க முன்வந்துள்ளதால் கூட்டணியில் சிக்கல் எழுந்துள்ளது. இது தொடர்பாக இரு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில், இன்று அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 2016 சட்டமன்ற தேர்தலில் 41 இடங்கள் ஒதுக்கப்பட்டது. அதே எண்ணிக்கையிலான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், திமுக தரப்பில் அதிகபட்சமாக 20 தொகுதிகள் வரை மட்டுமே தர முடியும் என கறாராக இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ் சத்தியமூா்த்திபவனில் நேற்று காங்கிரஸ் மாவட்டச் செயலாளா்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து கருத்துக் கேட்டாா். அப்போது பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. குறைவான தொகுதிகள் ஒதுக்கினால், திமுக கூட்டணி தேவையில்லை என்று சிலர் குரல் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பேச்சுவாா்த்தைக்கு வருமாறு காங்கிரஸை திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி, கே.ஆா்.ராமசாமி உள்ளிட்ட குழுவினா் திமுக குழுவினரை சந்தித்துப் பேச உள்ளனா். இன்றைய கூட்டத்தில் திமுக – காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. 22 முதல் 24 தொகுதிகள் வரை காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் 41 தொகுதி கேட்போம். இல்லையென்றால் 234 தொகுதிகளிலும் தனித்து நிற்போம். தன்மானம் காப்போம்’’ என போஸ்டர் அடித்து திமுகவுக்கு அதிர்ச்சி அளித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *