என் தம்பி திருமாவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியதுதான் சமூக நீதியா?.. விசிகவுக்கு அழைப்பு விடுத்த கமல்
என் தம்பி திருமாவளவனின் விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியதுதான் சமூக நீதியா என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை, மார்ச்-5

சென்னை மடிப்பாக்கம் கூட்டு ரோடு பகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கமல்ஹாசன் பேசியதாவது:
நம் நாடு பன்முகத்தன்மை கொண்டது. அதனை ஒரு முகம் ஆக்கினால் அழகு குறைந்துவிடும். கீழடியை இருட்டடிப்பு செய்கிறார்கள். நாடு முழுவதும் ஒரே கலாச்சாரத்தின் கீழ் கொண்டு வர முயற்சிக்கின்றனர். அது நடக்காது. தமிழகத்தில் சமூக நீதியை குத்தகைக்கு எடுத்தவர்கள் உதட்டு அளவில்தான் பேசிக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு, பேசுபவர்கள் சமூக நீதியை உங்கள் உயர்வுக்கு நாங்கள் போட்ட பிச்சைதான் என்று பேசுகின்றனர்.
சமூக நீதி பிச்சையல்ல, உரிமை. அதை புரிய வைக்கத்தான் நவீன அரசியலை முன்னெடுத்து வந்துள்ளோம். சமூக நீதியை பேசியவர்கள்தான் என்னுடைய தம்பி திருமாவளவனுக்கு 6 தொகுதி ஒதுக்கி உள்ளனர். என் தம்பி இங்கு வர வேண்டியவர். அதனை அடுத்த தேர்தலில் பார்ப்போம். அனைவரும் நம்மை நோக்கி வருவார்கள் என்று பேசுகிறேனே. ஆனால், அங்கு போகிறார்களே என்று பார்க்கிறீர்களா? யார் அங்கு போக வேண்டுமோ அங்கு போவார்கள். யார் வர வேண்டுமோ இங்கு வருவார்கள். இது வெல்லும் படை என்பதை மக்கள் வாயில் இருந்து வருவதால் உணர்கிறோம். பின்புலமாக நல்ல நம்பிக்கை உள்ள தமிழர்கள் இருக்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.