வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு…! அரசாணைக்கு இடைக்கால தடைகோரும் வழக்கு இன்று விசாரணை

வன்னிய சமூகத்தினருக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்டத்தை, சாதிவாரி கணக்கீடு தொடர்பான முடிவுகள் வெளிவரும் வரை நிறுத்தி வைக்க உத்தரவிடக்கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

மதுரை, மார்ச்-5

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவரும் சமூக நீதி பேரவையின் மாநில பொறுப்பாளருமான சின்னாண்டி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,” தமிழகத்தில் குரும்ப கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 30 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இந்த சமூகம் உள்ளது. சமூக, பொருளாதார மற்றும் கல்வி ரீதியாக மிகவும் பிந்தங்கிய நிலையிலேயே இந்த சமூகத்தைச் சேர்ந்த மக்கள் உள்ளனர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள சமூகத்தினருக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த 20 சதவீதத்தை 108 ஜாதிகள் பங்கிட்டுக் கொள்ளும் நிலை உள்ளது. இதனால் குரும்ப கவுண்டர் சமூகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை.

இதேபோல் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள பிற சமூகத்தினரும் பாதிக்கப்பட்டதால் இதனை கருத்தில் கொண்டு கடந்த டிசம்பர் 2020 அன்று தமிழக அரசு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி குணசேகரன் தலைமையில் சாதிரீதியான கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஆணையம் அமைத்தது. இந்த ஆணையம் முறையாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன்பாகவே, தமிழக அரசு வருகின்ற சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பிப்ரவரி 28ஆம் தேதி அன்று மசோதா ஒன்றை நிறைவேற்றியது. தமிழக முதல்வர், வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றி உள்ளார் .

இதற்கு தமிழக ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில், 68 சாதிகளைக் கொண்ட சீர்மரபினர் பிரிவினருக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கி வரும் நிலையில், வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள 22 சாதிகளுக்கு வெறும் 2.5% இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும். முறையாக சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதுவே சட்டரீதியான இட ஒதுக்கீடு அமைய வாய்ப்பு அளிக்கும். ஆகவே, வன்னிய சமூகத்தினருக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை சாதிவாரி கணக்கீடு தொடர்பான முடிவுகள் வெளிவரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும். அதுவரையிலும் வன்னிய சமூகத்தினருக்கு 10.5% உள் ஒதுக்கீட்டை நடைமுடைப்படுத்த இடைக்கால தடை விதிக்கவும் வேண்டும்” எனக் கூறியுள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *