தினமலர் முன்னாள் ஆசிரியர் டாக்டர்.இரா.கிருஷ்ணமூர்த்தி காலமானார்

தினமலர் ஆசிரியரும், நாணயவியல் அறிஞருமான இரா.கிருஷ்ணமூர்த்தி காலமானார். அவருக்கு வயது 88.

சென்னை, மார்ச்-4

சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி, தினமலர் நாளிதழ் ஆசிரியராக பணியாற்றினார். குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வடீவீஸ்வரம் என்ற கிராமத்தில் 1933-ஆம் ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதி பிறந்தவர். இவரது தந்தை டி.வி.ராமசுப்பையருக்கு பிறகு தினமலர் ஆசிரியர் பொறுப்பேற்ற இவர், தினமலர் நாளிதழை மிக உயர்ந்த இடத்திற்கு கொண்டு வந்தார்.

திருச்சி, சென்னை, மதுரை, ஈரோடு, கோவை, புதுச்சேரி, வேலூர், நாகர்கோவில் நகரங்களில் தினமலர் பதிப்புகளை துவக்கக் காரணமாக இருந்தவர். 2017 வரை ஆசிரியர் பொறுப்பு வகித்தார்.இவர் சங்க காலத்தில் பழந்தமிழ் மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களை கண்டுபிடித்து பெரும் ஆய்வு மேற்கொண்டவர்.

நாளிதழில் தமிழ் எழுத்து சீர்திருத்தம் முதன் முதலில் கண்டவர், கணினியில் தமிழ் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் எழுத்துருக்களை உருவாக்கியவர் என்ற பெருமையையும் கொண்டவர். நாணயவியல் தொடர்பாக 30 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி உள்ளார்.

தமிழ் செம்மொழி என்ற தகுதியை பெற, இவரது நாணயவியல் கண்டுபிடிப்புகளை தமிழக அரசு முக்கிய வரலாற்று ஆதாரமாக சமர்ப்பித்தது. தமிழுக்கு இவர் செய்த நற்பணியை பாராட்டி 2012-2013 ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது குடியரசுத் தலைவரால் இவருக்கு வழங்கப்பட்டது.

பத்திரிகை துறையில் சிறந்து விளங்கியதால் தமிழ் அச்சு மொழி வளர்ச்சியைப் பண்படுத்தியவர். கணினிக்கு ஏற்றவகையில், தமிழ் எழுத்துக்களை நவீனப்படுத்தி, தெளிவுமிக்க தமிழ் எழுத்துருக்களை உருவாக்கியவர். இப்படி, பன்முகத்திறன்கள் படைத்த முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி இன்று காலமானார்.

இவரது மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தினமலர் முன்னாள் ஆசிரியரும், பங்குதாரருமான டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் உடல், நாளை (மார்ச் 5) காலை 11 மணிக்கு சென்னை பெசன்ட் நகர், மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *