திமுக கூட்டணியில் விசிக-வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு.. தனிச்சின்னத்தில் போட்டி என திருமா பேட்டி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 தொகுதிகளில் தனிச்சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னை, மார்ச்-4

திமுக – விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. சட்டசபை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

திமுக கூட்டணியில் விசிக – 6, ஐ.யூ.எம்.எல். – 3, ம.ம.க. – 2 ஆகிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அப்போது விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் பாஜக, சங்க பரிவார அமைப்புகளால் காலூன்ற முடியாத நிலை உள்ளது. யுத்த களமாக சட்டப்பேரவை தேர்தல் களம் அமைய உள்ளது. அதிமுகவையும் திமுகவையும் தமிழகத்தில் ஒழித்துவிட வேண்டும் என பாஜக செயல்படுகிறது. கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லாத சூழ்நிலையில் எப்படியாவது தமிழகத்தில் கால் பதித்துவிட வேண்டும் என பாஜக முயல்கிறது. சமூக நீதி அரசியலையே இல்லாமல் அழித்துவிட வேண்டும் என நினைக்கிறார்கள்.

திமுகவுடன் இணைந்து செயலாற்றி வருவதற்கு காரணம் தமிழகத்தில் சாதி வெறியர்களும், மத வெறியர்களும் இடம் பெற்று விடக்கூடாது என்பதற்காகவே. சமூக நீதிக்கு ஆபத்து நேர்ந்துவிடக்கூடாது. அந்த நல்லெண்ணத்தின் அடிப்படையில் எந்த நிபந்தனையும் இன்றி கடந்த 5 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் பயணித்து வந்திருக்கிறோம்.

இந்த நிலையில் திமுக விசிகவோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதில் நாங்கள் 6 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவு செய்திருக்கிறோம். எங்கள் உயர்நிலைக்குழு நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்த நிலையிலும் கூட்டணியை தொடர்வதுதான் முதன்மையானது என்று இருக்கிறோம். தமிழகத்தில் மதவாத சக்திகள் உள்ளே வருவதற்கு விசிக காரணமாக ஆகிவிடக்கூடாது என்ற நல்லெண்ண அடிப்படையில் இந்த முடிவை அறிவிக்கிறோம். மதசார்பற்ற கட்சிகளின் வாக்குகள் சிதறினால் பாஜகவின் சதித்திட்டங்களுக்கு துணைபோவது என்ற அச்சம் விசிகவிற்கு மேலோங்கி இருக்கிறது. 6 இடங்களிலும் விசிக தனிச்சின்னத்தில் போட்டியிடும்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *