எங்கள் கூட்டணி முதல்வர் வேட்பாளர் கமல்தான்.. சரத்குமார் அதிரடி அறிவிப்பு

எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் கமல்தான் என மேடையில் சரத்குமார் அதிரடியாக அறிவித்தார்.

தூத்துக்குடி, மார்ச்-4

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6வது பொதுக்குழுக் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. தலைவர் மற்றும் பொதுச்செயலாளராக சரத்குமாரும், பொருளாளராக சுந்தரேசனும் தேர்வு செய்யப்பட்டனர். மாநில மகளிரணிச் செயலாளரான ராதிகா சரத்குமாருக்கு கூடுதலாக மாநில முதன்மை துணைப்பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. முந்தைய பொதுக்குழுவில் நியமிக்கப்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் அதே பதவியில் தொடர்வதாக தலைவர் சரத்குமார் அறிவித்தார்.

அப்போது, பேசிய சரத்குமார், “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கொடுத்த வாக்கின்படி கடந்த 10 ஆண்டுகாலம் அ.தி.மு.க கூட்டணியில் நாம் இருந்தோம். அவரது மறைவிற்குப் பிறகு அந்தக் கட்சிக்குள் நடப்பவற்றை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இருப்பினும், கூட்டணி தர்மத்திற்காக அமைதி காத்தோம். இந்தத் தேர்தலில் ஒன்றிரண்டு சீட் கொடுத்தால் கூட்டணியில் இருக்க மாட்டோம் என ஏற்கெனவே கூறியும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. ரெண்டு சீட் கொடுத்தால் போதும், அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்துவிடுவார். நாம ஈஸியா ஜெயிச்சிடலாம் என நம்மை குறைத்து மதிப்பிட்டுவிட்டார்கள்.

10 ஆண்டுகள் அந்தக் கட்சிக்காக உழைத்துவிட்டோம். ஆனால். நமக்கான உரிய மரியாதை தற்போது அங்கு இல்லை. நான் தேர்தல் பிரசாரம் செய்திருக்காவிட்டால் தற்போது அ.தி.மு.க அமைச்சரவையில் இருக்கும் 15 பேர் எம்.எல்.ஏ கூட ஆகியிருக்க முடியாது. மக்களைச் சந்திக்க அவ்வளவு பயந்து நடுங்கியவர்கள் அவர்கள். சில தொகுதிகளில் அவர்களை உள்ளே கூட அனுமதிக்கவில்லை. இன்று எல்லாவற்றையும் மறந்துவிட்ட சுயநலவாதிகள் அவர்கள். அதனால்தான் அ.தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேறினோம். தி.மு.க மட்டும் விதிவிலக்கா என்ன? அரசு அதிகாரிகள் முதல் யாரையும் மதிக்காத ஒரு கட்சி என்றால் அது தி.மு.கதான்.

13 ஆண்டுகளாக மக்களுடன் களத்தில் நிற்கும் சமத்துவ மக்கள் கட்சியின் செல்வாக்குதான் என்ன என மக்களிடம் தெரிந்து கொள்ளும் விதமாக இந்தத் தேர்தலைச் சந்திப்பதாகவும் முடிவெடுத்தோம். அந்த நேரத்தில் ஐ.ஜே.க கட்சியின் தலைவர் பச்சமுத்துவும் நம்முடன் இணைந்து ஆதரவு அளித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனைச் சந்தித்துப் பேசினோம், மக்களுக்கு மாற்றத்தை அளிக்கும் விதமாகவும், கொள்கை ரீதியாகவும் நம் கூட்டணியில் இணைவதாக சம்மதம் தெரிவித்துள்ளார். இன்னும் சில கட்சிகளும் நம்முடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார்கள். பேச்சுவார்த்தையும் தொடர்கிறது. விரைவில் மகத்தான வெற்றிக் கூட்டணி அமையும்.

இதில், இன்று கட்சி ஆரம்பித்தவர், நேற்று கட்சி ஆரம்பித்தவர் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. நான் எந்தப் பதவிக்கும் ஆசைப்படவில்லை. எங்கள் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் என்றால் அது நண்பர் கமல்ஹாசன்தான். 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்கள் களமிறங்குவது உறுதி. ச.ம.கவைப் பொறுத்தவரையில் 147 விருப்பமனுக்கள் பெறப்பட்டுள்ளன. பரிசீலனை, நேர்காணல் முடிந்த பிறகு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். நான் கட்டளையிட்டால், இந்தத் தேர்தலில் போட்டியிடுவேன் என ராதிகா சொன்னார். ‘இந்தத் தேர்தலில் அவர் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவார்’ என கூறிக்கொள்கிறேன். அத்துடன், நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் ச.ம.க சார்பில், நம் அரசியல் ஆலோசகர் லாரன்ஸ் போட்டியிடுவார்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *