அரசியலுக்கு சசிகலா முழுக்கு.. பதவி, அதிகாரத்துக்கு ஆசையில்லை என அறிக்கை..!

சென்னை, மார்ச்-4

அரசியலை விட்டு ஒதுங்குவதாக வி.கே.சசிகலா திடீரென அறிவித்துள்ளாா். சசிகலாவின் கையெழுத்து மற்றும் தேதியுடன் செய்திக் குறிப்பு என்ற பெயரில் புதன்கிழமை (மாா்ச் 3) இரவு அறிக்கை வெளியானது. அரசியலில் இருந்து விலகுவது குறித்து சசிகலா நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கை:-

நான் என்றும் வணங்கும் என் அக்கா, ஜெயலலிதாவின் எண்ணத்திற்கு இணங்க அவர் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர,

ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான, ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும். நம்முடைய பொது எதிரி என்று ஜெயலலிதா நமக்கு காட்டியவர்களை தடுத்து, பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட தொண்டர்கள் பாடுபட வேண்டும். என் மீது அன்பும், அக்கறையும் காட்டிய ெஜயலலிதாவின் உண்மைத் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன்.

நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் என்றும் தெய்வமாக வணக்கும் ஜெயலலிதாவிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாஜ மாநில தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: சசிகலா சொல்லியிருக்கிற காரணங்களை அரசியல் ரீதியாக அனைவரும் வரவேற்க வேண்டும்.

அவரால் அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று கனவு கண்டவர்களுக்கு எல்லாம் மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்திருக்கிறார். அவருடைய அறிவிப்பை முழுமனதோடு வரவேற்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *