ஐஎன்எக்ஸ் வழக்கு: சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு…

புதுடெல்லி, நவம்பர்-01

சிதம்பரத்தின் உடல்நிலை நலமாக உள்ளதால், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அவருக்கு இடைக்கால ஜாமீன் மனு வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இரண்டு வழக்குகளிலும் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். 

சிபிஐ வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் வழங்கப்படவில்லை. அமலாக்கத்துறையின் விசாரணைக் காவல் முடிவடைந்ததும், சிதம்பரத்தை மீண்டும் நவம்பர் 13-ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ப.சிதம்பரத்தின் உடல்நிலையை காரணம் காட்டி இடைக்கால ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணையின்போது, ப.சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ப.சிதம்பரத்திற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம் என்றும் அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், சிதம்பரத்தின் உடல்நிலை குறித்து வெள்ளிக்கிழமைக்குள் அறிக்கை அளிக்கும்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட்டது. 

இந்நிலையில், ப.சிதம்பரத்தின் உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவ குழு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், சிதம்பரத்தின் உடல் நிலை சீராக உள்ளது. அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க தேவையில்லை. அவரது சிறை அறையை சுத்தமாக வைத்து கொசுவலை அடித்து தர வேண்டும். அவருக்கு நல்ல குடிநீர் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அறிக்கையை ஏற்றுக்கொண்ட டெல்லி உயர் நீதிமன்றம், தேவைப்பட்டால் எய்ம்ஸ் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவில் சிதம்பரத்துக்கு சிகிச்சை அளித்து சிறையில் அடைக்க வேண்டும். சிறப்பு சிகிச்சை அளிக்க தேவையில்லை. அவரது சிறை அறையை மருத்துவ குழு கூறியது போல் பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டதுடன், சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமீன் தர மறுப்பு தெரிவித்து வழக்கை முடித்து வைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *