தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம்.. அடம்பிடிக்கும் வைகோ

வரும் சட்டமன்ற தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிடப்போவதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரித்துள்ளார்.

சென்னை, மார்ச்-2

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை திமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ஆகியோர் சந்தித்து, அவசர ஆலோசனை நடத்தினர். மதிமுக சார்பில் 8 தொகுதிகள் கேட்கப்படும் நிலையில், 5 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளியானது.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக அனைத்து தொகுகளிலும் தனி சின்னத்தில் தான் போட்டியிடும். மதிமுக தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என கட்சியினர் விரும்புகின்றனர். எத்தனை தொகுதிகள், பொது சின்னம் என வியூகங்களுக்கு பதிலளிக்க முடியாது. திமுக கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். 8 தொகுதிகள் வெற்றி பெற்றாலே உரிய அங்கீகாரம் கிடைத்துவிடும். நல்லதையே எதிர்பார்ப்போம். திமுக வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட விரும்புவது அவர்களுடைய உணர்வு, நியாயம். மதிமுகவின் தேர்தல் அறிக்கை பணிகள் நடைபெற்று வருகிறது. தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும். அதன்பிறகு தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்படும்” என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *