எம்.ஜி.ஆர். இல்லத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்கும் கமல்ஹாசன்..!

கமல்ஹாசன் ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட சென்னை ராமாவரம் எம்.ஜி.ஆர். இல்லத்தில் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து, நாளை மாலை பிரசாரத்தை தொடங்க இருக்கிறார்.

சென்னை, மார்ச்-2

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி முதல் கட்டமாக ஜனவரியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போதே, எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி பிரசாரம் மேற்கொண்டார் கமல்ஹாசன். ‘நான் எம்.ஜி.ஆரின் நீட்சி’ என்று கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் சொன்னார். இந்த சட்டப்பேரவைத் தேர்தலை எம்.ஜி.ஆரை மையப்படுத்தி கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் அக்கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.

அதற்கேற்ப எம்.ஜி.ஆர். முதன் முறையாக 1967, 1971 ஆகிய சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பரங்கிமலை தொகுதியில் போட்டியிடவும் கமல் முடிவு செய்துள்ளார். பழைய பரங்கிமலை தொகுதிதான் தற்போது ஆலந்தூர் தொகுதியாக அழைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு எம்ஜிஆர் செண்டிமென்டில் உள்ள கமல்ஹாசன், தற்போது ஆலந்தூரில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்திலிருந்து கமல்ஹாசன் நாளை (மார்ச் 3) தேர்தல் பிரசாரத்தை தொடங்கவும் முடிவு செய்திருக்கிறார்.

சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு பிந்தைய பிரசார சுற்றுப்பயணத்தை ஆலந்தூர் தொகுதிக்கு உட்பட்ட சென்னை ராமாவரம் எம்.ஜி.ஆர். இல்லத்தில் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து, கமல்ஹாசன் நாளை (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு தொடங்க இருக்கிறார்.

ராமாவரத்தை தொடர்ந்து, கொளப்பாக்கம், கிருகம்பாக்கம், மணப்பாக்கம், ஆலந்தூர், கிண்டி ரேஸ்கோர்ஸ், நந்தனம், மயிலாப்பூர் லஸ் கார்னர் என 25 இடங்களில் கமல்ஹாசன் பிரசாரம் செய்கிறார். நேரத்தை பொறுத்து 25 இடங்களில் 4 அல்லது 5 இடங்கள் தேர்வு செய்து, அதில் கமல்ஹாசன் திறந்த வேனில் நின்றப்படி மக்கள் நீதி மய்யத்துக்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.

சட்டசபை தேர்தலில் எம்.ஜி.ஆருக்கு, கமல்ஹாசன் அதிகப்படியான முக்கியத்துவம் கொடுத்து வருவதால், உணர்வுப்பூர்வமாக எம்.ஜி.ஆர். முதன் முதலாக போட்டியிட்டு வெற்றிப் பெற்ற ஆலந்தூர் தொகுதியில் கமல்ஹாசன் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *