பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு

சென்னை, நவம்பர்-01

வடகிழக்கு பருவமழையின்போது மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் சென்னை ரிப்பன் மாளிகையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வு கூட்டத்தில் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். இதில், வடகிழக்குப் பருவமழையின் போது ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பது குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரண பணிகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகள், சாலைகள் சீரமைப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

பின்னர், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்களிடம் பருவமழையின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டறிந்தார்.

இதில் குறிப்பாக பெருநகர சென்னை மாநகராட்சியில் 90 சதவீதம் நிறைவுற்றுள்ள ரூ.445 கோடி மதிப்பீட்டில் 171 கி.மீ. நீளத்திற்கான மழைநீர் வடிகால் பணிகளை வருகிற 30-ம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக அமைச்சர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், மாநிலப் பேரிடர் மேலாண்மைத்துறை ஆகிய துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் செயல்முறை விளக்கம் மூலம் விரிவாக விளக்கப்பட்டது

இதனிடையே சென்னை மாநகராட்சி சார்பில் ஊர்க்காவல் படையை சேர்ந்த 100 பேர், தன்னார்வலர்கள் 100 பேர் என மொத்தம் 200 பேருக்கு மழைவெள்ளத்தின் போது மீட்பு பணிகளில் ஈடுபடுவது தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. இந்த பயிற்சி முடித்தவர்களுக்கு மீட்பு பணிக்கு பயன்படுத்தும் உபகரணங்கள் அடங்கிய 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *