திமுக கூட்டணியில் ஐயூஎம்எல்-க்கு- 3; மமக-வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் (ஐயூஎம்எல்) கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு (மமக) 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மார்ச்-1

இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நடைபெற உள்ள 2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, தமிழகத்தில் 3 (மூன்று) தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது. இந்த பேச்சு வார்த்தையின்போது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பொதுச்செயலாளர் கே.எ.எம்.முஹம்மது அபூபக்கர், எம்.எல்.எ., பொருளாளர் எம்.எஸ்.எ.சாஜஹான், மாநில முதன்மைத் துணைத் தலைவர் எம்.அப்துல்ரகுமான், மாநில துணைத் தலைவர் கே.நவாஸ்கனி, எம்.பி., மாநிலச் செயலாளர் ஹெச்.அப்துல்பாசித் – கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ., துணைப் பொதுச்செயலாளர்கள் இ.பெரியசாமி, எம்.எல்.ஏ., க.பொன்முடி, எம்.எல்.ஏ., திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதர் மொய்தீன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் உட்பட 6 பேர் அடங்கிய குழு, திமுக தலைவரைச் சந்தித்தோம். 2 நாள் பேச்சுவார்த்தையில் 5 தொகுதிகளை எங்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம். கருணாநிதி காலத்தில் இருந்தே திமுக கூட்டணியில் முதலாவதாக முஸ்லிம் லீக் கட்சிதான் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது வழக்கம். அதே வழக்கத்தின்படி இம்முறையும் முதலாவதாக கையெழுத்திட்டுள்ளோம்.

காதர் மொய்தீன்: கோப்புப்படம்
5 தொகுதிகள் தர இயலவில்லை, நாட்டில் பல்வேறு சூழ்நிலைகள் நிலவுகிறது என திமுக தலைவர் தெரிவித்தார். திமுக அதிகமான தொகுதிகளில் போட்டியிடும் நிலைமையும், அதிகமான கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை கொடுக்க வேண்டிய நிலைமையும் உள்ளது. எனவே, எங்களுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கேரள மாநிலத்தில் 30 தொகுதிகளில் போட்டியிட இருக்கிறோம். மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் போட்டியிடுகிறோம். கேரளாவில் எங்களுக்குத் தனிச்சின்னமான ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறோம். இங்கும் அதில்தான் நிற்க முடியும். தொகுதிகள் முடிவு செய்யவில்லை.

கருணாநிதி முத்தமிழறிஞர். அவரின் நினைவு வந்தது. எனவே, 3 தொகுதிகள் போதும் என உடன்படிக்கையில் கையெழுத்திட்டோம். என்னென்ன தொகுதி என்பது குறித்து நாங்கள் பட்டியல் தர வேண்டும். எங்களுக்கு விருப்பப்பட்டியலில் 25 தொகுதிகள் உள்ளன. எங்களின் விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுப்பார்கள்” என்றார்.

அதேபோல், மமகவுடனான தொகுதி உடன்பாடு குறித்த அறிக்கையில், “நடைபெற உள்ள 2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், மனித நேய மக்கள் கட்சி, தமிழகத்தில் 2 (இரண்டு) சட்டமன்றத் தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது. இந்த பேச்சு வார்த்தையின்போது மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது, உயர்நிலைக்குழு உறுப்பினர் என்.ஷபியுல்லாகான் – கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ., துணைப் பொதுச்செயலாளர்கள் இ.பெரியசாமி, எம்.எல்.ஏ., க.பொன்முடி, எம்.எல்.ஏ., சுப்புலட்சுமி ஜெகதீசன், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுதிப் பங்கீடு உடன்பாடு ஏற்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மமக தலைவர் ஜவாஹிருல்லா,

“தமிழகத்தின் திசையை நிர்ணயிக்கக்கூடிய தேர்தலாக இது இருக்கும். பாஜக பல்வேறு மாநிலங்களில் நடத்திவரும் மலிவான அரசியல் இந்த தேர்தலில் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும். இதனால், திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக் கட்டிலில் அமரும். அப்போதுதான் மாநில சுயாட்சியை உரக்க நிலைநாட்டக்கூடிய மாநிலமாக தமிழகத்தை அமைக்க முடியும். அதிமுக – பாஜக கூட்டணி மிகப்பெரிய அளவில் தோல்வியைத் தழுவ வேண்டும்.

திமுக கூட்டணியில் அதிகமான கட்சிகள் இடம்பெற்றுள்ளன. நாட்டின் நலனை கருத்தில்கொண்டு தியாக மனப்பான்மையுடன் இயங்கக்கூடிய மமக, திமுக தலைவருடன் தொகுதி உடன்பாடு செய்திருக்கிறோம். 2 தொகுதிகளில் மமக போட்டியிடும். சின்னம் குறித்து அடுத்தக்கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்யப்படும். என்னென்ன தொகுதிகள் என்பதை பேச்சுவார்த்தை நடத்தி திமுக தலைவர் அறிவிப்பார்” என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *