இனி வன்னியர் வாழ்வில் வசந்த காலமே!! .. ராமதாஸ் மகிழ்ச்சி

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.50 சதவீத இடப்பங்கீடு மூலம் வன்னியர் வாழ்வில் இனி வசந்தம் வீசும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை, மார்ச்-1

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இடப்பங்கீடு: இறுதி ஒப்புதலைப் பெற்றோம்…
இனி வன்னியர் வாழ்வில் வசந்த காலமே!!
என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே!
தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டு சமூக ஊடகங்களில் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் 12 பக்கங்கள் கொண்ட அரசிதழ் பதிவு ஆவணத்தை நீ பார்த்திருப்பாய்; மகிழ்ந்திருப்பாய்; கொண்டாடி இருப்பாய் என்று நான் நம்புகிறேன். அந்த ஆவணத்தை பார்த்தவுடன் உனது எதிர்வினை எப்படியாக இருந்திருக்கும் என்பதை நான் எனது மனக்கண்களால் பார்க்கிறேன். உன் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி.

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை வென்றெடுப்பதற்காக கடந்த 40 ஆண்டுகளாக நாம் போராடி வருகிறோம். கடந்த இரு ஆண்டுகளாக தமிழக அரசுக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்ததுடன், கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டங்களையும் நடத்தியதன் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக அரசு முன்வந்தது.

பரபரப்பான நிமிடங்களுக்குப் பிறகு கடந்த 26-ம் தேதி பிற்பகலில் வன்னியர் இடப்பங்கீட்டு சட்டமுன்வரைவு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய சட்டத்திற்கு ஆளுனரின் ஒப்புதலைப் பெற்று, அரசாணை வெளியிடப்பட வேண்டும். சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில், மற்றவை இயல்பாக நடக்கவேண்டிய நிகழ்வுகள் தான். இவை தடைபடுவதற்கு எந்த வகையிலும் வாய்ப்பில்லை என்பதை நாம் அறிவோம்.

வன்னியர்களுக்கான 10.50 சதவீத இடப்பங்கீட்டுக்கான அரசாணை தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டு விட்ட நிலையில், அடுத்து வெளியிடப்படவுள்ள ஆள்தேர்வு அறிக்கையில், வன்னியர்களுக்கு 10.50 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டியது கட்டாயமாகும். இதை யாராலும் தடுக்க முடியாது. வன்னியர்களின் வாழ்க்கையில் இனி ஏற்றம் தான்.

ஏற்கனவே நான் குறிப்பிட்டதைப் போலவே நடப்பாண்டில் நிரப்பப்படவுள்ள அரசு பணியிடங்களில் நமது பாட்டாளிகள் தான் அதிக எண்ணிக்கை இருப்பார்கள். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.50 சதவீத இடப்பங்கீடு மூலம் வன்னியர் வாழ்வில் இனி வசந்தம் வீசும்.

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் திண்ணைப் பரப்புரை மிகவும் அமைதியான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தான் இருக்க வேண்டும். ஆரவாரமோ, ஆர்ப்பாட்டமோ கூடாது. வன்னியர்களின் வீடுகளுக்கு மட்டுமின்றி சகோதர சமுதாயங்களின் வீடுகளுக்கும் சென்று இடப்பங்கீட்டு போராட்டத்திற்கு அவர்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

வன்னிய மக்களின் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி நாம் நடத்திய போராட்டத்திற்கு தலைவர்களுக்கும், ஏராளமான அமைப்புகளுக்கும் இந்த தருணத்தில் நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வரலாற்று சிறப்புமிக்க வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தருணத்தில், கூட்டத் தொடரை திட்டமிட்டு புறக்கணித்து தங்களை அம்பலப்படுத்திக் கொண்ட சில கட்சிகளுக்கும் கூட, அவர்களின் செயலுக்காக இந்த நேரத்தில் எனது நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *