இந்தியா-ஜெர்மனி இடையே 11 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து…

புதுடெல்லி, நவம்பர்-01

தமிழ்நாட்டில் உள்ள ராணுவ தளவாடங்கள் உற்பத்தி முனையங்களில் இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள முன்வாருங்கள் என ஜெர்மனிக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல் அரசுமுறை பயணமாக அந்நாட்டின் 12 துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள் குழுவினருடன் டெல்லி வந்தார். டெல்லி ஐதராபாத் இல்லத்துக்கு சென்ற ஏஞ்சலா மெர்கலை பிரதமர் மோடி வரவேற்றார். இந்த சந்திப்பின்போது செயற்கை நுண்ணறிவு, நகர்ப்புற வளர்ச்சி, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் இந்தியாவும் ஜெர்மனியும் இணைந்து செயலாற்றுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

ஆலோசனையின்போது மோடி-ஏஞ்சலா மெர்கெல் முன்னிலையில் 5 கூட்டு பிரகடனங்களில் இந்தியாவும் ஜெர்மனியும் கையெழுத்திட்டன. விண்வெளித்துறை, உள்நாட்டு விமான போக்குவரத்து, கடல்சார் தொழில்நுட்பம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட 11 புதிய ஒப்பந்தங்களும் கையெழுத்தானது.

இதன் பின்னர் பிரதமர் மோடியும் ஏஞ்சலா மெர்கலும் செய்தியாளர்களிடையே உரையாற்றினர். பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றை எதிர்கொள்ள இருதரப்பு மற்றும் பலதரப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக நாங்கள் உறுதி ஏற்றுள்ளோம். உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ராணுவ தளவாடங்கள் உற்பத்தி முனையங்களில் இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள முன்வாருங்கள் என ஜெர்மனியை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *