வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு அறிவிப்பு தேர்தலுக்கான நாடகம்.. திருமா பேட்டி

மதுரை, மார்ச்-1

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்கவில்லை. பா.ஜனதா தலையீடு உள்ளது. இதை அவர்கள் தேர்தலை அறிவித்ததில் இருந்து அறியமுடிகிறது. மேற்குவங்கத்தில் தமிழகத்தை விட 60 சட்டசபை தொகுதிகள் தான் அதிகம். ஆனால் மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடத்த உள்ளனர். மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தலை நடத்துவதன் மூலம் தேர்தல் ஆணையத்தில் அரசியல் தலையீடு இருப்பது தெரிகிறது. குறிப்பாக பாஜக தலையீடு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டாக்டர் ராமதாஸ் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டவர், எப்படி 10.5 சதவீதத்துக்கு ஒப்புக்கொண்டார்? அப்படியென்றால் எஞ்சிய 9.5 சதவீதம் பேருக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்று ராமதாஸ் முடிவெடுத்து விட்டாரா? இந்த ஒதுக்கீடு எந்த அடிப்படையில் ஒப்புக்கொள்ளப்பட்டது எனக் கேள்வி எழுகிறது. தேர்தலுக்காகச் செய்யப்பட்ட ஒரு ஏற்பாடாக தெரிகிறது. தேர்தல் நாடகமாகத்தான் தெரிகிறது. கடன் தள்ளுபடி போன்ற அறிவிப்புகள் எல்லாம் வெறும் அறிவிப்புகளாகவே இருக்கின்றன. இவை எல்லாமே தேர்தல் நாடகம் என்றே கருத வேண்டியுள்ளது. பொதுவாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் ஒவ்வொரு சமூகத்தினரும் எத்தனை சதவீதம் பேர் இருக்கிறார்கள் என்பதை ஆதாரபூர்வமாக அறிய முடியும். அந்த அடிப்படையில் உள் ஒதுக்கீடுகளை வழங்கினால் சமூக நீதி அடிப்படையில் செய்யப்பட்டதாக இருக்கும்.

ஒவ்வொரு தேர்தலிலும் 3-வது அணி உருவாகும். ஆனால் எப்போதுமே இருதுருவ போட்டிதான் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *