இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல் நல்லடக்கம்

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சென்னை, பிப்-27

கம்யூனிஸ்ட் இயக்கத்தில் மூத்த தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியன், 1953-ல் இருந்து, 68 ஆண்டுகள் அரசியலில் தான் மறையும்வரை செயல்பட்டார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக 3 முறையும், தேசிய கவுன்சில் உறுப்பினராக இறுதி வரையிலும் பணியாற்றியவர் தா.பாண்டியன்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், தேசிய குழு உறுப்பினருமான தா.பாண்டியன் (வயது 89) முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த 24-ந்தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சிறுநீரக பிரச்சினை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்கள் எந்தவித பலனையும் அளிக்கவில்லை. இதனால் தா.பாண்டியன் நேற்று காலை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

அவரது மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், ஆளுநர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நேற்று காலை முதல் 2 மணி வரை குடும்பத்தார் அஞ்சலி செலுத்த அவரது அண்ணா நகர் இல்லத்திலும், பின்னர் 2 மணி முதல் இரவு 8 மணி வரை அவரது உடல் பாலன் இல்லத்திலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் சொந்த ஊரான உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலை பட்டிக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. இந்தநிலையில் உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டியில் உள்ள பண்ணை தோட்டத்தில் தா. பாண்டியன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *