நான்தான் முதல்வர் வேட்பாளர்.. கமல் திட்டவட்டம்..!

சென்னை, பிப்-27

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நிறைய நாட்கள் உள்ளது என எண்ணிக் கொண்டிருந்தவர்களின் எண்ணத்திற்கு ஒரு முற்றுப் புள்ளியை இந்திய தேர்தல் ஆணையம் வைத்துள்ளது. பழ.கருப்பையா இன்று ம.நீ.ம கட்சியில் இணைந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் வெற்றி வேட்பாளராக ம.நீ.ம சார்பில் தேர்தலிலும் போட்டியிடவுள்ளார். சட்ட பஞ்சாயத்து இயக்கமும் ம.நீ.ம வுடன் இணைந்து தேர்தல் களம் காணவுள்ளது. இவர்கள் அனைவரையும் நல்லவர்கள் கூடாரத்திற்கு வரவேற்கிறேன். ம.நீ.ம சார்பில் போட்டியிட ஏராளமான விருப்பமனுக்கள் குவிந்துள்ளன. தகுதியான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க எனது தலைமையிலான தேர்வுக்குழு வரும் மார்ச் 1 ஆம் தேதி நேர்காணலில் ஈடுபடும்.

வரும் மார்ச் 3 ஆம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கவுள்ளேன். மார்ச் 7 ஆம் தேதி முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 3% வாக்குகளை வைத்து மூன்றாவது அணியை அமைப்பது வெற்றிக்கு வழிவகுக்குமா என்று கேட்டால் நீங்கள் சொல்வது சரித்திரம், நான் சொல்வது மாற்றம் என்று நான் கூறுவேன். சரித்திரம் நிகழ்ந்துவிட்டது, மாற்றம் நிகழப்போகிறது. நாங்கள் யாருடனும் சமரசம் செய்துகொள்ளும் கட்சி கிடையாது. எங்கள் தலைமையிலான கூட்டணியில் நான் முதல்வர் வேட்பாளர் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது, அது அவ்வாறாகவே இருக்கும். வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எந்தக் கட்சிக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை, எங்களின் கதவு திறந்துள்ளது வரவேற்க ஆயத்தமாக உள்ளோம்.

இதற்கு முன் நடந்த ரஜினியுடனான சந்திப்பு நட்பு ரீதியிலானது. ஆதரவு கேட்க அல்ல, மார்ச் 3 ஆம் தேதி முதல்தான் எனது ஆதரவு கேட்கும் பயணத்தை துவங்கவுள்ளேன். தேர்தல் செலவுகளுக்கு நிதி திரட்டவுள்ளோம். வேட்பாளர்கள் இல்லாதவர்கள் என்றால் அவர்களுக்காக பொது வெளியில் இறங்கி நிதியுதவி கேட்க நாங்கள் வெட்கப்படமாட்டோம். பெறப்படும் நிதி மேஜைக்கு மேல் இருந்தால் தவறில்லை, மேஜைக்கு கீழ் இருந்தால்தான் அது தவறு. எங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு மட்டுமே தேர்தல் ஆணையத்தின் விதிமுறைக்கு உட்பட்டு செலவு செய்வோம். என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *