அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு

அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க. 23 தொகுதிகளில் போட்டியிட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னை, பிப்-27

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடுவது குறித்த பேச்சுவார்த்தை சென்னையிலுள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் அதிமுக தரப்பில் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில் பாமக போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டு, ஒப்பந்தத்தில் இரு கட்சி தலைவர்களும் கையொப்பமிட்டனர்.

பின்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார். போட்டியிடும் தொகுதிகள் பின்னர் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என கூறினார்.

இதன்மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுகவுடன் பாமக இணைந்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *