அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்?- சரத்குமார் பேட்டி

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக-விலிருந்து கூட்டணி குறித்து யாரும் பேசாததால் அங்கிருந்து விலகினேன் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை, பிப்-27

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலை, ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மற்றும் இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகளும் சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு, சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், அதிமுக கூட்டணியுடன் கடந்த பத்து ஆண்டுகளாக பயணித்துள்ளோம். எங்களுக்கு என ஒரு மரியாதையும் வாக்கு விகிதாச்சாரமும் இருக்கிறது என்பதால்தான் கூட்டணி அமைத்திருந்தனர். மதிப்பில்லாமல் யாரையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தற்போது தேர்தல் நெருங்குகிறது. ஆனால் அதிமுகவிலிருந்து கூட்டணி பற்றி யாரும் அழைத்துப் பேசவில்லை. தொடர்ந்து பயணித்தவர்களை அழைத்துப் பேசியிருக்கலாமே?

மக்களுக்காக நாம் சேவை செய்ய வேண்டும் என்றால் ஏதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்பதாலும், கூட்டணி குறித்து அழைப்பு வராததால், அதிலிருந்து விலகினேன். நல்ல எண்ணங்கள் கொண்டவர்கள் ஒன்றாக இணைந்தால் நன்றாக இருக்கும் என்று கருதியதால் கமலுடன் பேசினோம். மேலும், தேர்தல் கூட்டணி தொடர்பாக கமலிடம் நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.எங்கள் கூட்டணி வெற்றி பெற்ற பிறகே முதல்வர் யார் என்பது முடிவு செய்யப்படும். பணத்தை வாங்கிக் கொண்டு யாரும் வாக்களிக்காதீர்கள். இந்த ஒரு முறை பணத்தை வாங்கிக் கொண்டு வாக்களிக்க மாட்டோம் என்று முடிவு செய்யுங்கள்.

இவ்வாறு சரத்குமார் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *