தொகுதி பங்கீடு தொடர்பாக ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ்-உடன் பாஜக குழு பேச்சுவார்த்தை

தொகுதி பங்கீடு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் பாஜக குழு நடத்திய பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது. மத்திய அமைச்சர்கள் கிஷண் ரெட்டி, வி.கே.சிங், தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி, எல்.முருகன் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. தேர்தல் பரப்புரைக்காக அமித்ஷா இன்று தமிழகம் வரும் நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது.

சென்னை, பிப்-27

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். ஏற்கெனவே திமுக காங்கிரஸ் கட்சியுடன் ஒரு சுற்று தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தையை முடித்துவிட்டது.இதனிடையே, அதிமுக கூட்டணியில் இருந்த சமத்துவ மக்கள் கட்சி அக்கூட்டணியில் இருந்து விலகி இந்திய ஜனநாயக கட்சியுடன் இணைந்துள்ளது.

இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே இன்று பேச்சுவார்த்தை தொடங்கியது. இதற்காக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர்கள் கிஷண்ரெட்டி, சி.டி.ரவி, எல்.முருகன் ஆகியோர் பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். சுமார் 15 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடந்தது.இதைத் தொடர்ந்து பாஜக குழு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தையும் சந்தித்து பேசினர்.

இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வரவிருக்கிறார். இத்தகைய சூழலில் தமிழக பாஜக பொறுப்பாளர்கள் முதல்வர், துணை முதல்வரை சந்திப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

இதற்கிடையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 35 முதல் 40 தொகுதிகளை ஒதுக்குமாறு வலியுறுத்தி வருகிறது. ஆனால் பாஜகவுக்கு 20 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என அதிமுக தலைமை கறார் காட்டுவதாகவும் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *