சமத்துவ மக்கள் கட்சி – ஐஜேகே கூட்டணி..!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திடீர் திருப்பமாக, இந்திய ஜனநாயகக் கட்சியும் சமத்துவ மக்கள் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன. அதிமுக கூட்டணியிலிருந்து சமத்துவ மக்கள் கட்சியும் திமுக கூட்டணியிலிருந்து இந்திய ஜனநாயக கட்சியும் விலகிமாற்றத்திற்கான புதிய கூட்டணியை உருவாக்கி இருப்பதாக சரத்குமார், ரவி பச்சமுத்து ஆகியோர் அறிவித்துள்ளனர்.

சென்னை, பிப்-27

இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்துவும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரும் சென்னை வடபழனியில் செய்தியாளர்களை கூட்டாகச் சந்தித்தனர். அப்போது, தங்கள் கட்சிகள் இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ளதாக இரு தலைவர்களும் அறிவித்தனர்.

ஓட்டுக்கு பணம் கொடுக்காத, சாதிமத பேதமின்றி மக்களுக்கு சேவை செய்யும் கொள்கையில் ஒருமித்த கருத்து உள்ள கட்சிகள் இணைந்திருப்பதாக ரவி பச்சமுத்து கூறினார். திமுக மிகச்சிறந்த கட்சி என்றும் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு கௌரவத்தையும் அளித்ததாகவும் ரவி பச்சமுத்து குறிப்பிட்டார். அதே நேரத்தில், தங்கள் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக ரவி பச்சமுத்து கூறினார்.

அதிமுக கூட்டணியில் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தாததால், அந்தக் கூட்டணியிலிருந்து விலகுவதாக சரத்குமார் கூறினார். மக்கள் சேவை என்ற கொள்கையில் இருக்கும் கமல்ஹாசன் தங்கள் கூட்டணியில் இணைவார் என்று எதிர்ப்பார்ப்பதாகக் கூறிய சரத்குமார், ரஜினி மக்கள் மன்றத்தினரும் தங்களுடன் கரம் கோர்க்குமாறு அழைப்பு விடுத்தார். மாற்றத்துக்கான முதல் கூட்டணி என்று சரத்குமார் குறிப்பிட்டார். மக்கள் சேவை என்ற நிலைப்பாட்டில் உள்ள மேலும் சில முக்கிய கட்சிகளை கூட்டணிக்கு வர உள்ளதாக இரு தலைவர்களும் தெரிவித்தனர்.

இக் கூட்டணியில் இணைந்து போட்டியிட விரும்பும் கட்சிகளை வரவேற்கிறோம். கூட்டணியில் இணையக்கூடிய அனைத்து கட்சிகளுமே சமமான தலைமையாகத்தான் இருக்கும்.

எங்கள் கூட்டணி, எல்லா மத, இன மக்களை ஒன்றாக பார்க்கும் தன்மை கொண்டதாக இருக்கும். எங்களுடன் இணைய விரும்புபவர்கள் மக்கள் நலன் முன்னிறுத்துபவர்களாக இருக்க வேண்டும். நாங்கள் ஒத்த கருத்து உடையவர்களாக இருக்கின்றோம். எங்களை போல் எண்ணம் கொண்ட பலர் உள்ளனர். அவர்களையும் கூட்டணியில் இணையுமாறு அழைக்கிறோம். ரஜினி மக்கள் மன்றத்தில் தேர்தலில் போட்டியிட விரும்பினால் எங்கள் கூட்டணிக்கு வரலாம். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மக்களுக்கான முதன்மை கூட்டணியை உருவாக்க உள்ளோம். பாரிவேந்தர் எவ்வளவு நல்லது செய்தாலும் அந்த பெயர் திமுகவிற்கு தான் செல்கிறது. எங்களுக்கும் கட்சிக்கும் அங்கீகாரம் வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *