தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்.. ரூ.50,000க்கு மேல் எடுத்துச்செல்ல தடை

ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே ரொக்கமாக எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை, பிப்-27

இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை, தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழகத்தில் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 45 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வந்துள்ளனர். இவர்கள் போலீசாருடன் இணைந்து செயல்படுவார்கள். தமிழகத்திற்கு மேலும் கூடுதல் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்கு வருவார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் 70 சதவீதம் ஓட்டுச்சாவடிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள ஓட்டுச்சாவடிகள் இன்றைக்குள் இறுதி செய்யப்பட்டு விடும். பணம் பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இன்றே அதற்கான பணிகள் தொடங்கி விடும். பணம் பட்டுவாடா, தேர்தல் விதிமீறல்கள் குறித்து பொதுமக்களும் 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கும், சி-விஜில் ஆப் மூலமும் புகார் தெரிவிக்கலாம். மேலும் தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் செலவின பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள வங்கி உயர் அதிகாரிகளிடம் பண நடமாட்டத்தை கண்காணிப்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியுள்ளது. அதை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்படும். அதன்படி, பணம் நடமாட்டத்தை கண்காணிக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட ஒரே நபர் அடிக்கடி பணம் பரிமாற்றம் செய்வது, அதிக பணம் எடுப்பவர்கள் குறித்த தகவல்களை கண்காணித்து தகவல் தெரிவிக்கும்படி வங்கி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். ஓட்டுப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்வதற்கு சில நடைமுறைகள் உள்ளது. அந்த விதிமுறைகள் பின்பற்றப்படும்.

அரசியல் கட்சிகளுக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்படும். கடந்த முறை தேர்தல் முடிந்தபிறகு வாக்கு எண்ணிக்கை நடத்த அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, வாக்குப்பெட்டியை பாதுகாப்பாக வைக்க அரசியல் கட்சிகளுடன் இணைந்து கண்காணிப்பு பணிகள் ஏற்படுத்தப்பட்டது. அதேபோன்று, இந்த முறையும் கண்காணிப்பு கேமரா, துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு மற்றும் அரசியல் கட்சிகளும் இந்த பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் 50 ஆயிரத்துக்கும் மேல் பணம் எடுத்துச் சென்றால் அந்த பணத்தை எங்கிருந்து எடுத்துச் செல்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் வைத்திருக்க வேண்டும்.

சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றம் குறித்து ஆய்வு செய்யப்படும். 50,000 ரூபாய்க்கு அதிகமாக பணம் வைத்திருந்தால் ஆவணங்கள் காண்பிக்க வேண்டும். ஏடிஎம் அல்லது வங்கியில் இருந்து பணம் எடுத்து சென்றதற்கான ரசீது வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் தேர்தல் பறக்கும் படை வீரர்கள் பணத்தை பறிமுதல் செய்வார்கள். பணம் பறிமுதல் செய்யப்பட்டாலும், பணம் மற்றும் நகைகளை எடுத்துச் செல்வதற்கான ஆதாரத்தை காட்டி, திரும்ப பெற்றுக்கொள்ளலாம். வாக்காளர்கள் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் இப்போது கூட ஆன்லைன் மூலம் தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளலாம். தேர்தல் ஆணையம் அவ்வப்போது சொல்லும் நடைமுறைகள் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த முறைகேடும் செய்ய முடியாது. பணப்பட்டுவாடா தொடர்பாக 1950 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *