ஏப்ரல் 1-ம் தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்.. முதல்வர் அறிவிப்பு

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம், பிப்-26

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் 100 ஏரிகளுக்கு எடுத்துச் செல்லும் திட்டத்தை இன்று (பிப்-26) காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அருகே உள்ள திப்பம்பட்டி பகுதியில் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின்படி மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் போது அணையின் இடது கரையில் இருந்து உபரி நீர் கால்வாய்கள் மூலம் திப்பம்பட்டி நீரேற்று நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் .பின்னர் அங்கிருந்து 940 குதிரை திறன் கொண்ட 10 மின் மோட்டார்கள் மூலம் நீரேற்றம் செய்து குழாய்கள் வழியாக வினாடிக்கு 126 கன அடி வீதம் 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எம்.காளிப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும். இதன் பிறகு அங்கிருந்து 23 ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படும்.
இந்த திட்டத்திற்காக வெள்ளாளபுரம் ஏரியில் துணை நீரேற்று நிலையம் மற்றும் கண்ணந்தேரியில் துணை நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.

பின்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றி பேசியதாவது:-

நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க விவசாயிகள் கோரிக்கை அவ்வப்போது தெரிவித்து வந்தனர். இதற்காக திட்டம் நிறைவேற்ற முடிவு செய்து அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது.இந்த திட்டம் உரிய காலத்தில் முடிக்கப்பட்டிருக்கிறது. வேகமாகவும் விரைவாகவும் திட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தை பெரிய சவாலாக எடுத்து செய்து முடித்திருக்கிறோம்.

இந்த திட்டத்திற்கு நிலம் தர பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டோம். இதை ஏற்று பொதுமக்கள் தானாக முன்வந்து இந்த திட்டத்திற்கு நிலங்களை அர்ப்பணித்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்த முதல்வர், அம்மாவின் அரசு வேளாண் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது. தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த உபரி நீர் திட்டம் உரிய காலத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தத் திட்டம் மூலம் 4 ஆயிரத்து 738 ஏக்கர் பாசன வசதி பெறும்.

அம்மாவின் அரசு உச்ச நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி காவிரி நதிநீர் பிரச்னை தீர்த்து வைத்தது. இது வரலாற்று சாதனையாகும். காவிரி டெல்டா பாசன விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். இந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அவர்களது வாழ்வாதாரம் மேம்பட உரிய வழிவகை செய்து இருக்கிறோம். விவசாயிகளுக்கு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அமைக்கப்பட்டிருக்கிறது .

விவசாயிகள் புயல் மற்றும் வறட்சி தொடர் மழையால் பாதிக்கப்பட்ட போது பயிர்கடன் ரூ.12 ஆயிரத்து 110 கோடி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அம்மா அரசு 5 ஆண்டுகளில் இரண்டு முறை பயிர் கடன் ரத்து செய்து சாதனை படைத்துள்ளது.

தேர்தல் நேரத்தில் கோரிக்கைகள் வைப்பார்கள். பின்னர் திட்டங்கள் நிறைவேற்றப்படும். ஆனால் பொதுமக்கள் கோரிக்கை வைக்காமலேயே பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். வறட்சி காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ரூ.2747 கோடி இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டு உள்ளது.மேட்டூர் அணையிலிருந்து உரிய காலத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தண்ணீர் கடைமடை வரை சென்றதால் நல்ல விளைச்சல் ஏற்பட்டது. 32 லட்சத்து 41 ஆயிரத்து மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்து சாதனை புரியபட்டுள்ளது. இதற்கு காரணம் உரிய காலத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டது தான்.

குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரி, குளம், குட்டைகள் தூர்வார பட்டதால் ஏரி குளம் குட்டைகள் நிரம்பி வழிகிறது. நீர் மேலாண்மை திட்டத்திற்கு தேசிய விருது பெற்று இருக்கிறோம். 14 ஆயிரத்து 400 கோடி மதிப்பில் காவிரி குண்டாறு திட்டம் அறிவித்து புதுக்கோட்டையில் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த அரசு வேளாண் மக்களை காக்கும் அரசு. வேளாண் தொழிலாளர்களை காக்கும் அரசு. இதனால் வீடு, நிலம் இல்லாத விவசாயிகளுக்கு கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும்.

என்று முதல்வர் பழனிசாமி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசகம், சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், திட்டக்குழு துணைத்தலைவர் பொன்னையன், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் மாநில மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *