தமிழகம் முழுவதும் 2-வது நாளாக அரசு பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்

போக்குவரத்துக் கழக ஊழியா்களின் வேலைநிறுத்தம் இரண்டாவது நாளாக தொடரும் நிலையில், தமிழகம் முழுவதும் வேலைக்கு செல்வோர், வெளியூருக்கு செல்வோர் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

சென்னை, பிப்-26

14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதி வழங்க வேண்டும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு உடனடி ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 25-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே தொடங்கியது. இதையடுத்து போராட்டத்தை முன்னெடுத்துள்ள தொ.மு.ச., சி.ஐ.டி.யு., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்துகள் வழக்கத்தை விட குறைந்த அளவில் இயக்கப்படுவதால் பல மாவட்டங்களில் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் சென்னையில் பெரிய அளவில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை என கூறப்படுகறிது. இதனால் அனைத்து மின்சார ரெயில் நிலையங்களிலும் பயணிகள் மிகுதியாகவே காணப்பட்டனர். அதேபோல மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் காணப்படுகிறது.

போக்குவரத்துக் கழக ஊழியா்களின் வேலைநிறுத்தம் இரண்டாவது நாளாக தொடரும் நிலையில், வழக்கமான பேருந்துகள் இயக்கப்படாததால் பணிக்குச் செல்வோா், வெளியூா் செல்வோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்கள், தற்காலிக ஊழியர்களைக் கொண்டு இயக்கப்படும் மிக குறைந்த அளவிலான பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *