சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி விருப்பமனு!

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுவதற்காக அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விருப்பமனுவை அளித்தார்.

சென்னை, பிப்-25

திமுக சார்பில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்பது உறுதியாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று திமுகவினர் பலரும் விருப்ப மனு தாக்கல் செய்திருந்த நிலையில், உதயநிதியே இன்று சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்தார். எனவே, உதயநிதி ஸ்டாலின் அவருடைய தாத்தா போட்டியிட்டு 3 முறை வென்ற சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

இதுபற்றி செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், “சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவது குறித்து பொதுச்செயலாளர் முடிவு செய்வார். சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி பகுதி திமுக செயளாலர்கள், மாவட்டச் செயலாளர் இத்தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். எளிதில் வெற்றி பெறலாம் எனத் தெரிவித்தனர். அதனால்தான், இத்தொகுதியில் போட்டியிட முடிவு செய்தேன்.” என்று தெரிவித்தார். இத்தொகுதியில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு போட்டியிடுவதாக தொடர்பாக செய்தியாளர்கள் உதயநிதியிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “எனக்கு இன்னும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. வாய்ப்பு கொடுத்த பிறகு அதைப் பற்றி பேசுவோம்” என்று தெரிவித்தார்.

மறைந்த திமுக எம்.எல்.ஏ, ஜெ.அன்பழகன் இரண்டு முறை இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *