3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி.!

இங்கிலாந்திற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்தியா 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளது.

அகமதாபாத், பிப்-25

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. இதற்கிடையே, குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய 3-வது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 112 ரன்னில் சுருண்டது. அக்சார் பட்டேல் 6 விக்கெட் சாய்த்தார். இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் கிராலி 53 ரன்கள் சேர்த்தார்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 145 ரன்னில் சுருண்டது. ரோகித் சர்மா 66 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜோ ரூட் 5 விக்கெட்டும், ஜேக் லீச் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.பின்னர் 33 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் ஓவரிலேயே அக்சார் பட்டேல் க்ராலி, பேர்ஸ்டோவ் ஆகிய இருவரையும் டக்அவுட்டில் வெளியேற்றினார்.

அதன்பின் அக்சார் பட்டேல், அஷ்வின் மாயாஜாலத்தில் இங்கிலாந்து 81 ரன்னில் சுருண்டது. அக்சார் பட்டேல் 5 விக்கெட்டும், அஷ்வின் 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

81 ரன்னில் இங்கிலாந்து சுருண்டதால் 48 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றது. இதனால் 49 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இந்த வெற்றி மூலம் இந்தியா 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளது.

தொடர்ந்து, 49 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதற்கிடையே, 3-வது டெஸ்ட் போட்டி 2 நாளில் முடிவுக்கு வந்ததால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். முதல்நாளில் 13 விக்கெட்களும், 2வது நாள் 17 விக்கெட்களும் விழுந்ததால் ஆடுகளம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 1950ம் ஆண்டுக்கு பிறகு குறைவான நேரத்தில் முடிந்த 7-வது டெஸ்ட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *