ராகுல் காந்தியிடம் பொய் சொன்னவர் நாராயணசாமி.. புதுச்சேரியில் மோடி சரவெடி பேச்சு..!

புயல் பாதிப்பு குறித்த பெண்ணின் முறையீட்டை, தன் கட்சியின் தலைவரிடம் தவறாக மொழிபெயர்த்து சொன்னவர்தான் நாராயணசாமி. காங்கிரஸ் கட்சியின் இத்தகைய பொய்யர்களை பொதுமக்களால் எப்படி நம்ப முடியும்? என்று புதுச்சேரியில் பேசிய பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுச்சேரி, பிப்-25

டெல்லியில் இருந்து சென்னை வந்த பிரதமர் மோடி சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்றார். அப்போது பிரதமரை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தலைமைச் செயலர் அஸ்வினி குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் வரவேற்றனர். பின்னர் ஜிப்மர் மருத்துவமனை அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி 4 புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர் புதுச்சேரி லாஸ்பேட்டையில் பாஜக தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர்; வளர்ச்சி பணிகள் புதுச்சேரி மக்களுக்கு மேலும் பல வாய்ப்புக்களை உருவாக்கி தரும். புதுச்சேரி மக்களுக்கு வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. காங்கிரசின் தவறான ஆட்சியிலிருந்து புதுவை மக்கள் விடுதலை பெற்றுள்ளனர். மக்களின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் காங்கிரஸ் அரசு நொறுக்கிவிட்டது. மக்களிடம் அதிகாரம் இருக்கும் வகையில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும். டெல்லியில் காங்கிரஸ் தலைமைக்கு சேவகம் செய்யும் ஆட்சி தான் இதுவரை நடைபெற்றது. மக்களின் நம்பிக்கையை இழந்ததால் புதுச்சேரி அரசு கவிழ்ந்தது.

மக்களுக்கு சேவை செய்வதில் அக்கறை இல்லாதது காங்கிரஸ் ஆட்சி. மக்களுக்கு மத்திய அரசு தீட்டிய திட்டங்களையும் கிடைக்கவிடாமல் காங்கிரஸ் ஆட்சி நடத்துகிறது. மத்திய அரசுக்கு புதுச்சேரி அரசு ஒத்துழைப்பு தரவில்லை. தன் மீதான புகார் குறித்து நாராயணசாமி ராகுல் காந்தியிடம் தவறாக மொழிபெயர்த்தார். சில நாட்களுக்கு முன் ராகுல் காந்தி புதுச்சேரி வந்த போது புயல் பாதித்தவர்களுக்கு உதவி கிடைக்கவில்லை என்று பெண் ஒருவர் புகார் கூறினார். ஆனால் ராகுல் காந்தியிடம் நாராயணசாமி அதனை தவறாக மொழிபெயர்த்து பொய்யான தகவலை தெரிவித்தார். முதல்வர் வந்து பார்க்கவில்லை என்று அந்த பெண் வேதனையுடன் தெரிவித்தார். புதுச்சேரியில் உள்ளார்ச்சி தேர்தலை நடத்த காங்கிரஸ் அரசு மறுத்துவிட்டது. ஜனநாயகத்தை மதிக்காத காங்கிரசை வரும் தேர்தலில் மக்கள் தண்டிப்பார்கள். புதுச்சேரி வந்த ராகுல் மீனவர்களுக்கு தனியாக அமைச்சகம் அமைக்கப்படும் என்று பொய் பேசினார். 2019-ம் ஆண்டிலேயே பாஜக அரசு மீனவர்களுக்கு தனியாக அமைச்சகத்தை அமைத்துவிட்டது. மக்கள் பிராந்தியம், சமூகம் வாரியாக பிரித்துப் பார்ப்பதில் காங்கிரஸ் கைதேர்த்தவர்கள்.

வட இந்தியாவை விட தென் இந்திய மக்கள் ஆழமான பார்வை கொண்டவர்கள் என்று ராகுல் காந்தி பேசியது பற்றயும் விமர்சனம் செய்தார். புதிதாக தொழில் தொடங்குவோருக்கு உதவுவதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சாகர்மாலா திட்டம் கடலோர மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவும். சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் சாலை வசதிகள், துறைமுகங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. புதுச்சேரியில் கூட்டுறவு துறையை காங்கிரஸ் அரசு முறையாக நிர்வகிக்கவில்லை.

பாஜக கூட்டணி ஆட்சி அமைந்ததும் புதுச்சேரியில் கூட்டுறவுத்துறை மேம்படுத்தப்படும். மக்கள் வாக்களிப்பதற்கு முன் மத்திய அரசு நிறைவேற்றி உள்ள திட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *