விருதாச்சலத்தில் விஜயகாந்த், விருகம்பாக்கத்தில் பிரேமலதா, அம்பத்தூரில் விஜயபிரபாகரன் போட்டியிட விருப்ப மனு..!

சென்னை, பிப்-25

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கூட்டணி கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று வருகின்றன. அதிமுகவில் எடப்பாடியில் போட்டியிட முதல்வர் பழனிசாமியும், போடியில் போட்டியிட துணை முதல்வர் ஓபிஎஸ்சும் விருப்ப மனு அளித்துள்ளனர்.

திமுகவில் காட்பாடி தொகுதியில் போட்டியிட அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் விருப்ப மனு அளித்திருக்கிறார். அந்த வகையில், காங்கிரஸ் மற்றும் தேமுதிக ஆகிய கூட்டணிக் கட்சிகள் இன்று முதல் விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியுள்ளன. அந்தந்த கட்சிகளின் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகிக்கப்படுகிறது.

இந்த நிலையில், தேர்தலில் விஜயகாந்த், மனைவி பிரேமலதா, மகன் விஜயப்ரபாகரன் போட்டியிட தேமுதிகவினர் விருப்பமனு அளித்துள்ளனர். விருதாச்சலத்தில் விஜயகாந்த்தும், விருகம்பாக்கத்தில் பிரேமலதாவும், அம்பத்தூர் தொகுதியில் விஜயபிரபாகரனும் போட்டியிட அவர்கள் விருப்ப மனு அளித்துள்ளனர். தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று அவர்கள் மூவரும் மேற்கண்ட தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என தேமுதிக தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.

வாரிசு அரசியலை கடுமையாக சாடிய விஜயகாந்த், தற்போது அவரது மகன், மனைவியுடன் தானும் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். அவரது மைத்துனர் எல்.கே.சுதீசுக்கும் நிச்சயமாக சீட் கேட்பார்கள் எனக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *